full screen background image
Search
Monday 24 March 2025
  • :
  • :

உலகளவில் பரவியிருக்கும் பன்னிரண்டு கோடிக்கும் மேலான தமிழ் பார்வையாளர்களிடத்தில் பிரபலமான இணைய தொடர் ‘நாம்’.

ஏப்ரல் 14 முதல் நெட்பிளிக்ஸ்சில் (netflix) நாம் (NAAM Web series) இணைய தொடர்

உலகளவில் பரவியிருக்கும் பன்னிரண்டு கோடிக்கும் மேலான தமிழ் பார்வையாளர்களிடத்தில் பிரபலமான இணைய தொடர் ‘நாம்’. ஆறு இசை கலைஞர்களை கொண்ட ‘ஒன் மியூசிக்’ எனும் சர்வதேச இசை குழு ஒன்றின் இசை பயணத்தையும், அவர்களின் வாழ்வியலையும் விவரிக்கும் இந்த இணையத் தொடரை இயக்குநர் டி. சூரியவேலன் எழுதி, ஸ்இயக்கியிருக்கிறார். 32 அத்தியாயங்கள் கொண்ட இந்த இணையத் தொடரில் இடம் பெற்ற ஐந்து பாடல்கள் யூட்யூப் தளத்தில் வெளியாகி, இருநூறு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ‘ஆதி பெண்ணே…’ என தொடங்கும் பாடல், அனைவராலும் இன்றுவரை கொண்டாடப்படும் பாடலாகும்.

‘ஒன் மியூசிக்’ என்ற இசை குழுவின் தோற்றத்தையும்.. அதன் வெற்றி பயணத்தையும்.. அதில் இடம்பெற்றிருக்கும் ஆறு திறமையான இசை கலைஞர்களின் கூட்டணி குறித்தும் விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆறு இசைக்கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய ‘ஒன் மியூசிக்’ எனும் இசைக்குழு புகழில் உச்சியை தொடுகிறது.

இந்த தருணத்தில் ‘ஒன் மியூசிக்’ எனும் இசைக் குழுவின் வெற்றிக்கு தங்களது கடும் உழைப்பு தான் காரணம் என ஒவ்வொரு இசை கலைஞர்களுக்குள் தவறான நம்பிக்கை உண்டாகிறது. இதன் காரணத்தால் இசைக்குழுவினரிடையே புரிதலின்மை, துரோகம், பொறாமை.. போன்றவை ஏற்படுகிறது. இதனையடுத்து இவர்களிடையே விரிசலும், பிளவும் ஏற்படுகிறது. பிறகு அவர்கள் எந்த புள்ளியில் மீண்டும் ஒன்றிணைந்து இசை குழுவின் பயணத்தைப் புதுப்பித்துக் கொண்டு தொடங்கினார்கள் என்பதை இந்த ‘நாம்’ எனும் இணைய தொடர் விவரிக்கிறது.

அனாதை ஆசிரமம் ஒன்றால் வளர்க்கப்பட்ட ஒரு மனிதன், விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்கிறான். இவன் தனக்கான ஆத்ம ரீதியான துணையை.., வாழ்க்கையில் இறுதியில் சந்திக்கிறான். அப்போதுதான் அவருக்கு காதலை பற்றி துல்லியமான புரிதல்… அனுபவமாக ஏற்படுகிறது. காலங்கள் கடந்து செல்ல… குணப்படுத்த இயலாத நோயால் அவரது மகள் பாதிக்கப்படுகிறாள். இதனால் அவருக்குள் மீண்டும் சோகம் ஏற்படுகிறது. இந்நிலையில் ‘ஒன் மியூசிக்’ எனும் இசைக்குழுவின் தீவிர ரசிகர் ஒருவர், அந்த குழந்தை வாழ்நாளில் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும்… இவளுக்கு இசை மீது அதிக பிரியம் இருப்பதால், ‘ஒன் மியூசிக்’ எனும் இசைக் குழுவினை சேர்ந்த இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து அவரை சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறார். ஒன் மியூசிக் இசை குழுவினருக்கு இந்த விவரம் தெரிய வருகிறது. அவர்கள் சந்திக்க ஒப்புக்கொள்கிறார்கள். திட்டமிட்டபடி இந்த சந்திப்பு நடைபெற்றதா…? இறக்கும் தருவாயில் உள்ள அந்த குழந்தையின் ஆசையை இசைக் குழுவினர் நிறைவேற்றினார்களா…? இசை குழுவினரிடையே இருந்து வரும் தவறான புரிதல்கள் களையப்பட்டு, அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தார்களா..! அல்லது இந்த சந்திப்பின் பின்னணியில் இசைக் குழுவினை பிளக்கும் ஒரு மனிதனின் சதி திட்டம் இருந்ததா..? இதை இந்த ‘நாம்’ எனும் இணையத் தொடர் சுவராசியமாக விவரிக்கிறது.

அன்பையும், நம்பிக்கையும் விதைப்பது தான் ‘நாம்’ இணையத் தொடர் என்கிறார் இயக்குநர் டி. சூரியவேலன்

நாம் என்னும் இணைய தொடரின் மையமாக இசை இருந்தது. இந்த தொடர் வெற்றி பெற்றதன் ரகசியம் என்ன?

எளிமையாக சொன்னால், நான் இசையை விரும்புகிறேன். இசை – எந்த சூழலிலும் நம் மனதில் ஊடுருவி அசாத்தியமான அனுபவத்தை வழங்க கூடிய ஆற்றல் கொண்டது. ஒரு திரைப்படத்தை அதனுடன் வரும் பாடல்களின் அடிப்படையில் பார்வையிடுவது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. ஒரு இசை மற்றும் அது தொடர்பான காட்சிகள் கண்களுக்கு விருந்தாக விரிவடையும் போது… பார்வையாளர்களுடன் எங்களுடைய பிரத்யேக படைப்பு முத்திரையை பகிர்ந்து கொள்வதற்கு சிறந்த வழியாகும்.

இந்த இணையத் தொடருக்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் ஆகியவற்றை எழுதி இருக்கிறீர்கள். இவற்றை எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது எது?

நான் காணும் திரைப்படங்கள்…. தொடர்ச்சியான உரையாடல்கள்… அன்றாட ம் என்னை கடந்து செல்லும் மக்கள்… என பல உந்துதலின் காரணமாகத்தான் இதனை எழுதினேன். உண்மையை மையமாகக் கொண்ட முழு நீள பொழுதுபோக்கு பயணத்தை வழங்குவதே எனது நோக்கம். மேலும் நான் இதனை முழு மனதுடன் எழுதுகிறேன். இந்த எழுத்துக்கள்.. பார்வையாளர்களிடையே துல்லியமாக எதிரொலித்ததற்கு நான் என்றென்றும் நன்றி உள்ளவனாகவே இருக்கிறேன்.

வசனகர்த்தாவாக.. பாடலாசிரியராக.. திரைக்கதையாசிரியராக.. இயக்குநராக.. நாயகனாக.. என பன்முக ஆளுமையை இந்த தொடரில் நீங்கள் கையாண்டிருக்கிறீர்கள். இதற்கான முன் தயாரிப்பு மற்றும் இறுதி வடிவம் குறித்து விளக்கம் தர இயலுமா..?

நீங்கள் குறிப்பிடும் அனைத்து பிரிவுகளிலும் சரியான தருணத்தில் உறுதியான முடிவை மேற்கொள்வது சவாலானதாக இருந்தது. இருப்பினும் தயாரிப்பு குழு, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் சரியான விபரங்களை காண்பிக்க வேண்டி இருந்தது. எந்த ஒரு சிக்கலும் தடையும் தாமதமும் ஏற்படாமல் இருக்கவும், ஒரு திரைக்கதையை உயிரோட்டமாகவும், யதார்த்தத்துடன் இருப்பதற்காகவும் முழுமையான அளவிலான குழுவாக ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் எங்களது செயல்பாடுகளை மாற்றி அமைத்துக் கொண்டோம்.

உங்களது குழுவினரை உத்வேகமுடன் செயல்பட நீங்கள் கையாண்ட அணுகுமுறை குறித்து…?

அனைவரும் விரும்பக்கூடிய அழகுடன் கூடிய ஒரு பிரபஞ்சம் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக கற்பனைத் திறனுக்கும்.. அனுபவங்களின் ஊடாக பெற்றிருந்த நிபுணத்துவத்திற்கும் அப்பாற்பட்ட ஒளிப்பதிவாளர்களுடன் நாங்கள் பணியாற்றினோம். படப்பிடிப்பு நடைபெற்ற 54 நாட்களிலும் எங்களுடைய தினசரி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினோம். அடர்ந்த வனங்கள்.. நிலத்தடி பதுங்கு குழிகள்.. எஃகு கிடங்குகள்.. கப்பல் தொழிற்சாலை.. என வித்தியாசமான கள பின்னணியில் கடுமையாக உழைத்து, அன்றைய அட்டவணையை திட்டமிட்டபடி நிறைவேற்றினோம்.

‘நாம்’ இணைய தொடர் உங்களுக்கு கற்றுக் கொடுத்தது என்ன?

எங்களின் அடுத்த திட்டத்தை பரந்த அளவில் முன்னெடுத்து செல்வதற்கான விலை மதிக்க இயலாத அனுபவத்தை இந்த இணைய தொடர் எனக்கு வழங்கியிருக்கிறது.

நாம் இணைய தொடரிலிருந்து பார்வையாளர்கள் பெற்ற அனுபவம் என்ன?

ஒரு மனிதனை சூழ்நிலைகள் தான் உருவாக்குகின்றன. யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்று விரல் நீட்டி குறிப்பிடுவது நமக்கு எளிதானது. ஆனால் அதற்கான துல்லியமான காரணத்தை யாராலும் புரிந்து கொள்ள இயலாது. இருப்பினும் இந்தத் தொடர் உலகம் உள்ளவரை அன்பும், நம்பிக்கையும் தான் மேலோங்கி இருக்கும் என்பதனை உரத்து வலியுறுத்தி இருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *