full screen background image
Search
Sunday 8 September 2024
  • :
  • :
Latest Update

இன்று முதல் உலகமெங்கும் வெளியாகி பிரபலங்கள் பாராட்டும் ‘D3’ திரைப்படம்

இன்று முதல் உலகமெங்கும் வெளியாகி பிரபலங்கள் பாராட்டும் ‘D3’ திரைப்படம்

D3 படம் பாருங்கள் : இயக்குநர் நடிகர் சசிகுமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

யாரும் சொல்லாத விஷயத்தைச் சொல்லி இருக்கும் படம் : இயக்குநர் மோகன் ஜி பாராட்டு!

‘D3’ படத்திற்கு தயாரிப்பாளர் கே .ராஜன், ஊடகவியலாளர் முக்தார் அகமத் பாராட்டு!

ஊடகங்கள் பாராட்டும் ‘D3’ படம்!

இளைய இயக்குநர் பாலாஜியின் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ள ‘டி3’ படத்தின் திரையீடு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்களும் பத்திரிகை ஊடக நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.இந்நிகழ்வில்

படத்தின் நாயகன் பிரஜின் பேசும் போது,

” நான் ரொம்ப நாளாக நல்ல பிரேக்கிற்காகக் காத்திருந்தேன். இது மாதிரி ஒரு நல்ல படம் செய்ய வேண்டும் என்று எனக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படம் வந்தது. ஜெயலலிதா அவர்கள் இறந்த காலகட்டத்தில் அந்தப் படம் வெளியானதால் நான் எதிர்பார்த்த மாதிரி அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. எனக்குள் நெடுநாளாகவே ஒரு ஆசை இருந்தது. சரியான போலீஸ் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கனவு இருந்தது.ஏனென்றால் எனது தந்தை ,தாய் இரண்டுபேருமே காவல்துறையில் பணியாற்றினார்கள்.
நான் நடித்தால் எனது உடல் தோற்றம் சரியாக இருக்குமா? ஃபிட்டாக ஆகுமா ?யூனிஃபார்ம் போட்டால் பொருத்தமாக இருக்க வேண்டுமே யாரும் பார்த்துச் சிரித்து விடக்கூடாதே என்ற அச்சமும் தயக்கமும் இருந்தது. அந்த நேரத்தில் தான் பாலாஜி வந்தார் , கதை சொன்னார். முதலில் வில்லனாக நடிப்பதற்காகத்தான் என்னிடம் கேட்டார். என் நல்ல நேரம் நான் இதில் கதாநாயகனாக மாறி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

குற்றாலம், தேனி என்று ஒரு நாளில் நடக்கும் கதை.போலீஸ் கதை என்றாலே மாஸ்ஸாக காட்டி
பெரிய ஹீரோக்கள் நடிப்பார்கள். புதிதாக வருபவர்கள் அப்படி நடிப்பதில்லை. அது ஒரு ரிஸ்க்கான விஷயம். ஆனால்
இயக்குநர் பாலாஜி தன் மனதில் என்ன நினைத்தாரோ அதையே படமாக எடுத்துள்ளார். அருமையாக திரைக்கதை அமைத்துள்ளார். ஒரே இரவில் நடக்கும் கதை இது. தமிழ் சினிமாவில் யாரும் இது மாதிரி முயற்சி செய்யவில்லை .பெரிய மாஸ் ஹீரோ படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது .புது படக் குழுவினரின் நல்ல புதிய படைப்புகளுக்கு ஊடகங்கள் என்றும் ஆதரவு தரும்.ஊடகங்களான உங்களை மீறி எதுவும் இல்லை. இருபது ஆண்டு காலத்தில் நான் உணர்ந்த பாடம் இது .நல்ல படத்தை ஊடகங்கள் என்றும் கைவிட்டதில்லை. இந்தப் படம் எனக்குப் பிடித்த படம்.நீங்கள் எழுதும் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் படத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்கும்.இயக்குநருக்கும் இதைத் தயாரித்த பீமாஸ் நிறுவனத்திற்கும் நன்றிகள்” என்றார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஊடகப் பிரபலம் முக்தார் அகமத் பேசும்போது,

“டி3 திரைப்படம் படத்தின் மூலம் ஒரு வார்த்தை என்பது ஒரு வழக்கிற்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் கூறியுள்ளார்கள்.ஒரு வார்த்தையை அடிப்படையாக வைத்து இந்தக் கதை உருவாகியிருக்கிறது என்பதை உணர முடிந்தது.ஒரு வார்த்தை என்பது டி3 படத்திற்கு மட்டுமல்ல ஊடக உலகத்திற்கும் பொருந்தும்.நேர்காணல் செய்யும்போது அந்த ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்து நாங்கள் விவாதிப்போம். ஒரு பாதர் 120 வீடு கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்றார். அவர் கூறிய ஒரு வார்த்தை யோசிக்க வைத்தது.ஒரு தனி மனிதர் எப்படி இதைச் செய்ய முடியும்? முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது ஆனால் அவர் அரசு வழங்கும் மானியத்தில் இருந்து பெற்றுக் கட்டிக் கொடுத்ததாக பிறகு தெரிந்தது.

ஓர் அரசியல் கட்சித்தலைவர் சாதி பார்க்க மாட்டேன், சாதி ரீதியாக வேட்பாளர்களை நிறுத்த மாட்டேன் என்றார். நாங்கள் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தோம் .ஆனால் ஈரோடு தொகுதியில் உண்மையை அறிந்தபோது வருத்தமாக இருந்தது.

எப்போதும் தமிழர்கள் பிரச்சினையை ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பவர்கள்.தமிழ்நாட்டில் சிலர் அரசியல் ஆதாயத்திற்காக ஜாதி இன பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு மக்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்த நினைக்கிறார்கள்.
ஆனால் தமிழர்கள் தெளிவானவர்கள். அந்த வேலை இங்கு நடக்காது.
தமிழர்களை இனரீதியாக, மொழி ரீதியாகப் பிளவு படுத்திட நினைத்தால் அவர்களுக்குத் தமிழக மக்கள்பாடம் புகட்டுவார்கள்.
என்னையே தெலுங்குக்காரன் என்கிறார்கள். நான் ஆரணியில் பிறந்தவன்.எனக்குத் தெலுங்கு எல்லாம் தெரியாது. என் குடும்பத்தினர் பாய் வேலை செய்பவர்கள்.

ஒரு வார்த்தையை மையமாக வைத்து இந்தப் படம் சிறப்பாக உருவாகியிருக்கிறது. படத்திற்கு வாழ்த்துக்கள். ஒரு வார்த்தை என்பது தேடல் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும் படமாக இந்த டி3 இருக்கிறது .வாழ்த்துக்கள்” என்றார்.

படத்தில் இயக்குநர் பாலாஜி பேசும்போது ,

“இது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வு .முதலில் வேறொரு கதாநாயகனை வைத்து ஒரு திரைப்படம் ஆரம்பித்தேன் அதைத் தொடர முடியவில்லை. பிறகு D3 என்ற இந்தப் படத்தை ஆரம்பித்தேன். இது ஒரு சீக்வல் கதை. D3க்கு பிறகு D2, D1 படங்கள் தயாராகும்.

இந்தப் படத்திற்கு பிரஜினை நடிக்க வைத்த போது உடன் அறிமுகமான நண்பர், பிரஜின் வேண்டாம் என்றார். இந்தக் கதையைச் சொல்லும் போது பலரும் கதையை நம்ப மாட்டார்கள் .தயாரிப்பை நம்ப மாட்டார்கள்.நமக்கான நடிகர் வருவார் என்று நான் காத்திருந்து தேடினேன். அப்படி வந்தவர் தான் பிரஜின். இதில் ஒரு காட்சி வரும். அதில் நடிப்பதற்கு யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் பிரஜின் ஒப்புக்கொண்டார்.

இது கோவிட் காலத்தில் சிக்கிக் கொண்டது .அந்த இடைவெளியில் பிரஜின் தனது உடலை ஃபிட்டாக மாற்றினார். பிறகு வேறு ஒரு தோற்றத்திற்காகவும் உடலை மாற்றிக்கொண்டார். இந்தப் படத்தில் பல்வேறு போராட்டங்கள் இருந்தன. இன்று படம் எடுப்பதை விட பிறகு உள்ள பிரச்சினைகள் அதிகம். தமிழ் சினிமாவில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று புரிவதற்குள் நீண்ட காலமாகிவிடும்.நமக்கு அறிமுகமாகி வருபவர்கள், நண்பர்களிடம்
அசல் யார் போலியார் என்று அறிந்து கொள்வதே பெரிய சவால்.

முன்பு என்னை வைத்து படம் தொடங்கிய தயாரிப்பாளர் முருகேசன், இங்கே வந்துள்ளார். நிச்சயமாக அந்தப் படமும் வெளியாகும். எனக்கு எப்போதும் சில நண்பர்கள் உடன் இருக்கிறார்கள் .

பீமாஸ் கிரிக்கெட் டீம் என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணம் செய்தார்கள். ரஜீஷ். அருள்ஜோதி, நா. சரவணன் போன்றவர்கள் எப்போதும் எனக்கு நேர் நிலையான நம்பிக்கை அளித்தார்கள்.

முதலில் மூன்றரை மணி நேரமாக இருந்த இந்தப் படத்தை ராஜா முகமது ஒரே வாரத்தில் முதல் பாதியை எடிட் செய்து காட்டிய போது வேறு மாதிரியாக மாறியது. பெரிய நம்பிக்கை ஏற்பட்டது.

அதேபோல் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கடும் உழைப்பாளி. லோ பட்ஜெட்டில் உள்ள விஷயத்தை தனது திறமையின் மூலம் ஹை பட்ஜெட் ஆக மாற்றிக் காட்டுவார்.இந்தப் படம் நிச்சயமாக சுவாரசியமாக இருக்கும்.
வேகம் குறையாமல் விறுவிறுப்பாக இருக்கும்”என்றார்.

நடிகர் ‘ராட்சசன்’ புகழ் சரவணன் பேசும்போது

“நான் இந்தப் படத்தில் ஒரு நாள் தான் நடித்திருப்பேன். ஆனாலும் திருப்தியான அளவில் எனது நடிப்பு இருந்தது.

அவசரம் அவசரமாக என்னை அழைத்தார்கள். டீ எஸ்டேட்டில் இருட்டுக்குள் இரவு நேரத்தில் நான் நடித்த காட்சியை எடுத்தார்கள். இவ்வளவு அவசரப்படுகிறார்களே, இது சரியாக வருமா என்று எனக்கு அப்போது ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் டப்பிங் பேசும் போது அதைப் பிரேமில் பார்த்தபோது நான் வருவது ஒரு காட்சியாக இருந்தாலும் மிகவும் சிறப்பாக இருந்தது.அது நான் எதிர்பாராத வகையில் இருந்தது .அந்த வகையில் இந்தப் படம் என் மனதிற்கு நெருக்கம் ஆகிவிட்டது .இந்தப் படம் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்” என்றார்.

தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் பேசும்போது ,

“டி3 ஒரு திருட்டு கதை அல்ல. ஒரிஜினலாக அசலாக சிந்தித்து உழைத்து உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களாக காசு சேர்த்து இந்தப் படத்தை முழுதாக எடுத்துள்ளார்கள். பல வலிகளையும் போராட்டங்களையும் வேதனைகளையும் கடந்து தான் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இதில் நடித்திருக்கும் பிரஜினுடன் நான் ஒரு படத்தில் நடித்துள்ளேன். மிக நல்ல இளைஞர்.இந்தப் படத்தில் இயக்குநருக்கும் நடிகருக்கும் சிறிய கருத்து வேறுபாடு வந்தபோது அதை நான் தீர்த்து வைத்தேன்.இப்போது இருவரையும் ஒன்றாகப் பார்க்கும் போது அவர்களது நாகரீகமான பண்பை நான் பாராட்டுகிறேன்.
இருவரும் திறமை உள்ளவர்கள்.எதிர்காலத்தில் வளர்ந்து பெரிய ஆளாக வருவார்கள்.

என் உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் நான் இங்கு வந்திருக்கிறேன். காரணம் சிறு தயாரிப்பாளர்கள் வாழ வேண்டும். தயாரிப்பாளர் யாரும் கஷ்டப்படக்கூடாது போட்ட பணம் திரும்பிவர வேண்டும் என்பதற்காகத் தான். சின்ன தயாரிப்பாளர் ஒரு படம் எடுத்து வெற்றி பெற்றால் கார் ,பங்களா என்று வாங்க மாட்டான். மேலும் படம்தான் எடுப்பான். அதன் மூலம் பல புதிய நடிகர்களும் புதிய தொழில்நுட்பக் கலைஞர்களும் வருவார்கள். இப்படி 100 படங்கள் வரும் .அதை நம்பிப் பல குடும்பங்கள் பிழைக்கும். பிரதீப் ரங்கநாதன் என்கிற புதிய இளைஞன் ஜெயித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. பகாசூரன் , மோகன் ஜி இயக்கிய படம். முதல் வாரம் சுமாராக இருந்து, இரண்டாவது வாரம் மெல்ல சூடு பிடித்து பிறகு ஓட ஆரம்பித்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது அறிந்து மகிழ்ச்சி.
சிறிய தயாரிப்பாளர்கள் வரவேண்டும் ,வளர வேண்டும் அதற்காகவே நான் அவர்களை ஆதரிக்கிறேன்.சில இயக்குநர்கள் தேவைக்கு அதிகமாகச் செலவு செய்து தயாரிப்பாளர்களை அழித்து விடுகிறார்கள் .ஆனால் இந்தப் படம் குறைந்த முதலீட்டில் தயாரிப்பாளர்களை காப்பாற்றும் வகையில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஊடகங்கள் நல்ல மாதிரியாக எழுதி நாலு வாரங்கள் ஓட்டினால் போதும்.தயாரிப்பாளர் தப்பித்து விடுவார்.இந்தப் படம் நன்றாக ஓடி வெற்றி விழாவில் சந்திப்போம்”என்று பேசினார்.

படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் மோகன் ஜி கூறும்போது,

“என்னுடைய முதல் படத்தின் கதாநாயகன் பிரஜின் திரை உலகில் தனக்கான ஒரு அடையாளத்தையும் நல்ல வெற்றியையும் தேடிக்கொள்ள வேண்டும் என்று சுமார் 14 ஆண்டு காலம் போராடும் ஒரு போராளி .நல்லதொரு ஆத்மா. D3 படம் பார்த்தேன்.நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது .யாரும் சொல்லாத விஷயத்தை இந்தப் படத்தில் சொல்லியுள்ளார்கள்.இந்த படத்தைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .இப்படிக் கூட மருத்துவத்துறையில் நடக்குமா என்று நான் ஆச்சரியப்பட்டேன். ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறேன் தயவு செய்து இந்தப் படத்தை ஒருமுறை திரையரங்கு சென்று பாருங்கள். வேறு எந்தப் படத்திற்குச் சென்றாலும் இதையும் அந்தப் படத்துடன் சேர்த்துப் பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் .படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

இயக்குநர் நடிகர் சசிகுமார் கூறும் போது,

” தம்பி பிரஜின் நடித்த D3 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அனைவரும் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள் .இந்தப் படத்தில் நடித்த தம்பி பிரஜினுக்கும் படத்தை இயக்கிய இயக்குநருக்கும் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மறவாமல் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள்” என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வாறு இந்தப் படத்தைப் பார்த்த திரை பிரபலங்களுக்குப் படம் பிடித்துப் போய் வாழ்த்தி,கருத்தைக் கூறி வருகிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்த ஊடகத்துறையினர்
இயக்குநருக்கும் நடிகர் பிரஜினுக்கும் ஒரு புதியவாழ்க்கை தரும் விதத்தில் இந்தப் படம் அமைந்திருப்பதாகப் பாராட்டு தெரிவித்தார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *