நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘சிக்லெட்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்
*’சிக்லெட்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*
*தலைமுறை இடைவெளியை மையப்படுத்தித் தயாராகும் ‘சிக்லெட்ஸ்’*
தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திர நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பிரபாஸ், வெங்கடேஷ் ஆகியோரின் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சாத்விக் வர்மா, தமிழில் முதன்முறையாக கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘சிக்லெட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஸ்ரீகாந்த் அடாலாவின் இணை இயக்குநரும், ‘திறந்திடு சிசே’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. இதில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவர் ‘பாகுபலி 1’ மற்றும் ‘எஃப் 3’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ‘வலிமை’ படத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜாக் ராபின்சன் மற்றொரு கதையின் நாயகராக நடித்திருக்கிறார். நடிகைகள் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹைதர், மஞ்சீரா ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீமன், மனோபாலா, சம்பத்ராம், சுரேகா வாணி, ஜானகி, மீனாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ‘வலிமை’ மற்றும் ‘துணிவு’ படப்புகழ் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்புப் பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை ராஜு மேற்கொண்டிருக்கிறார். டீன்ஸ் டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ். எஸ். பி. ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஸ்ரீனிவாசன் குரு, தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவு பெற்றது. தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” 2கே கிட்ஸ் இளைஞர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையே ஏற்படும் தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாகி இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் காதல் குறித்தும், காமம் குறித்தும் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கும், இது தொடர்பாக அவர்களுடைய பெற்றோர்களின் நிலைப்பாட்டிற்கும் இடையே உள்ள கருத்தியல் இடைவெளியை சுவாரசியமான சம்பவங்களுடன் சிக்லெட்ஸில் விவரித்திருக்கிறோம். இதனால்தான் இப்படத்தின் டைட்டிலுடன் ‘2k கிட்ஸ்’ என்ற டேக்லேனையும் இடம்பெற வைத்திருக்கிறோம். இந்த படத்தின் படபிடிப்பு தமிழகம், விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றது. ” என்றார்.
‘சிக்லெட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர்களின் தோற்றம்.. பின்னணியில் இடம் பெற்றிருக்கும் வண்ணங்கள்.. இளைய தலைமுறையின் எண்ணங்களை பிரதிபலிப்பதால் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.