full screen background image
Search
Monday 28 April 2025
  • :
  • :

‘பபூன்’ திரைப்பட விமர்சனம்

‘பபூன்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ், அனகா, ஆடுகளம் நரேன் நடித்துள்ள படம் பபூன். முதலமைச்சருக்கும், கட்சியின் மூத்த அரசியல்வாதிக்கும் ஈகோ பிரச்சனை வருகிறது.

அரசியல்வாதிக்கு பாடம் புகட்ட நினைக்கும் முதல்வர் அரசியல்வாதி செய்யும் நிழல் உலக போதைமருந்துகள் கடத்தல் காவல் துறை மூலமாக தொழில்களில் கை வைக்கிறார்.இவர்களின் ஈகோவில் அப்பாவி இளைஞன் டிரைவர் குமரன் (வைபவ் )சிக்கிக் கொள்கிறான்.

போதை பொருள் கடத்தல் தலைவன் தனபால் என்பவன் குமரன்தான் என பொய்யாக புனைகிறது காவல் துறை. இவர்களிடம் இருந்து தப்பித்து, காதலி உதவியுடன் இலங்கை செல்ல முயல்கிறான். இதிலும் தோற்று போகிறான். உண்மையான தானபால் யார்? குமரன் தப்பித் தானா? என பல சுவாரஸ்யமான முடிச்சுகளை நேர்த்தியான திரைக்கதையில் அவிழ்க்கிறார் டைரக்டர்.

படத்தின் ஹீரோ வைபவ்வாக இருந்தாலும், இவரை விட மற்றவர்கள் சிறப்பாக நடித்து உள்ளனர். மாவட்ட எஸ்பி யாக வரும் தமிழரசன் ஓரளவு நிஜ போலீஸ் அதிகாரியை கண் முன் நிறுத்துக்கிறார். வைபவ் நண்பராக வரும் அந்தகுடி இளையராஜாவின் உடல் மொழியும், குரல் வளமும் மிக சிறப்பாக உள்ளது.

தமிழ் சினிமாவின் அடுத்த நகைச்சுவை நடிகர் ரெடி. வாத்தியாராக வரும் கஜாராஜ் நிஜ கூத்துகலைஞனை நினைவுபடுத்துகிறார். அனகா இலங்கை பெண்ணாக நடித்து, வித்தியாசமான நடிப்பை தந்திருகிறார். தந்தையின் நாடக தொழிலை வெறுத்து அயல் நாடு போக ஆசைப்படும் போது வைபவ் சமகால இளைஞர்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார்..

சிறிது நேரமே வந்தாலும் திரையை அழுத்தமாக ஆக்கிரமிக்கிறார் ஜோஜு ஜார்ஜ். அவருடைய மிகையில்லாத நடிப்பும் உடல் மொழியும் அழகாக ரசிக்க வைக்கின்றன. ஆடுகளம் நரேன், வ.ஐ. ச. ஜெயபாலன் உள்ளிட்டோர் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணனின் இசையும்பாடல்களும் கதைக்குப் பலம் சேர்க்கின்றன. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவில் ராமேஸ்வரம் பகுதிகளின் கடல் காட்சிகள் ஈர்க்கின்றன.

எதிலும் முழுமை இல்லாத திரைக்கதையின் தடுமாற்றம் ஆங்காங்கே தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை. வைபவுக்கும் நாயகிக்குமான காதல் காட்சிகள் திணிக்கப்பட்ட செயற்கை. இதுபோன்ற குறைகளைச் சரி செய்திருந்தால், இந்த சீரியஸ் ‘பபூன்’ இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *