full screen background image
Search
Saturday 21 June 2025
  • :
  • :
Latest Update

Mansoor Ali Khan Questions secrecy around Jayalalithaa’s death

முதல்வர் ஜெ., மரணத்தில் மர்மம்

நீதிமன்றம் தாமாக வழக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்

ஆஸ்பத்திரி சிசிடிவி பதிவுகளை வெளியிட வேண்டும்

நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்

நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. 21ம் தேதி நல்ல உடல் நலத்தோடு நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர் மறு நாள் எப்படி இத்தனை சீரியசாக முடியும்.
அப்படியே உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்தாலும் அதை ஏன் ரகசியமாக வைக்க வேண்டும்.
தமிழக கவர்னர், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி என பலரையும் பார்க்க விடாமல் தடுத்தது ஏன்?

சாதாரண காய்ச்சல் என்று தானே சொன்னார்கள். பின்னர் பார்க்க முடியாத அளவுக்கு ரகசியம் காத்தது ஏன்?
75 நாட்கள் அடைத்து வைத்து இல்லாமல் செய்வதற்கு என்ன காரணம்?
முதல்வர் கூடவே இருக்கும் மருத்துவ குழு 22ம் தேதி என்ன செய்தது?
மருத்துவமனைக்கு பேசும் நிலையில் சென்றாரா… அல்லது நினைவிழந்த நிலையில் சென்றாரா?

இதற்கான சி.சி டி.வி. காட்சிகள் வெளியிடப்பட வேண்டும்.
அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
தியேட்டரில் தேசிய கீதம் பாட வேண்டும் என சுயமாக உத்தரவிட்ட நீதிமன்றம் முதல்வர் ஜெயலலிதா மரணத்தையும் சிறப்பு வழக்காக தாமாகவே முன்வந்து எடுத்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.

ஐசியுவில் சேர்த்திருந்தாலும் கண்ணாடி வழியாக பார்க்க முடியுமே… அதையும் தடுத்தது ஏன்?
நான் பல முறை ஆஸ்பத்திரி போனேன். அவர்கள் சொல்வதை கேட்டுவிட்டு வந்தேன்.
இந்த சந்தேகத்தை அப்பல்லோ வாசலில் ஏன் கேட்கவில்லை என்றால் “அம்மா குணமடைகிறார்… ஆப்பிள் சாப்பிடுகிறார். அரை இட்லி சாப்பிடுகிறார் ” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
அவரை பார்த்துக் கொள்ள கூட இருந்த உதவியாளர் சசிகலா இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
எப்படியாவது அம்மா நலமாக திரும்பி விடுவார் என்றுதான் நானும் என்னைப் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்களும் அமைதி காத்தார்கள்.
எனக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்க பார்த்தார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அவர்களால் விரட்டப்பட்ட கூட்டம்தானே இப்போது அவர் உடல் அருகே நின்றது.
இதே சசிகலாவை இதே குற்றச்சாட்டுகள் சொல்லி தானே வீட்டை விட்டு அம்மா விரட்டினார்.
எனவே முதல்வர் மரணத்தில் உள்ள சந்தேகத்தை மீடியாக்கள் தான் தீர்க்க வேண்டும்.
ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?

நானும் அதிமுகவில் இருந்திருக்கிறேன். பல முறை போயஸ்வீட்டுக்கு குடும்பத்தோடு போய் அம்மாவை பார்த்திருக்கிறேன்.
குழந்தை மனசு அவர்களுக்கு. இப்போது வாட்ஸ் அப், பேஸ் புக்கில் வருகின்ற செய்திகளை பார்க்கிற போது நெஞ்சு பதறுகிறது.
சாக வேண்டிய வயசே இல்லை. அவரை அடித்தார்கள், கீழே விழுந்து விட்டார் தூக்கப் போன வேலைக்காரப் பெண்ணை தடுத்தார்கள் என்று என்னென்னவோ செய்திகள் வெளி வருகிறது.
இதை எல்லாம் கேள்விப் படுவதால் பல நாட்களாக எனக்கு தூக்கம் வரவில்லை.
75 நாட்கள் தனி அறையில் இருக்கும் போது தன்னை வந்து யாரும் பார்க்க மாட்டார்களா… என்று ஏங்கி இருக்க மாட்டாரா?
தமிழகத்தில் தெருத் தெருவாக போய் நான் உங்களுக்காக என் வாழ்வையே அர்ப்பணம் செய்திருக்கிறேன் என்று சொல்லி சொல்லி உழைத்து தானே இந்த பதவிக்கு வந்தார்கள்.
அப்படிப்பட்ட ஒரு செல்வாக்கு மிக்க தான் இறந்த பிறகு தன் மரணம் ஏன் நடந்தது என்று கேள்வி கேட்க கூட ஒருவருமா இல்லை இந்த தமிழகத்தில் என்று அம்மாவின் அன்மா யோசிக்காதா…
நான் கொஞ்சமாவது அவரின் உப்பை சாப்பிட்டிருக்கிறேன்.

எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை வெளிப்படுத்தி விட்டேன். இனி இதற்கு அவரோடு இருந்த சசிகலா, அப்பல்லோ பிரதாப் ரெட்டி ஆகியோர் தான் பதில் சொல்ல வேண்டும்.

தேவை பட்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேள்வி கேட்பேன்.

அதோடு சட்ட ரீதியாக வழக்கும் போடுவேன். முதல்வரின் அண்ணன் மகள் தீபாவையும் ஏன் தடுத்து நிறுத்தி விரட்டினார்கள். அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்வதிலும் ஏன் இந்தனை அவசரம் காட்டினார்கள்.

ஒரு சாமானிய குடிமகனாக இந்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறேன்.

இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *