full screen background image
Search
Tuesday 29 April 2025
  • :
  • :

‘சீதா ராமம், திரைப்பட விமர்சனம்

‘சீதா ராமம்’ திரைப்பட ரேட்டிங்: 4.5/5

துல்கர் சல்மான்,மிருணாள் தாகூர் நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘சீதா ராமம்’. படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.

காஷ்மீரில் நடக்கும் ஒரு மதக்கலவரத்தில் இளவரசி நூர் ஜஹானை (மிருணாள் தாகூர்), ராணவ வீரர் ராமன் ( துல்கர் சல்மான்) காப்பாற்றுகிறார். இதனையடுத்து துல்கரின் மீது காதல் கொள்ளும் நூர் ஜஹான், அவருக்கு யாருமில்லை என்பதை அறிந்து கொண்டு, காதல் கடிதங்களை எழுதுகிறார்.

ஒருக்கட்டத்தில் இருவரும் சந்தித்து காதல் வளர்த்து வர, திடீரென்று வரும் போர் பணிக்காக கிளம்புகிறார் துல்கர் சல்மான். இறுதியில் அவர் மீண்டும் நாடு திரும்பினாரா..? அவரின் காதல் என்னவானது..? அங்கு அவரது காதலிக்காக எழுதிய கடிதத்தின் நிலை என்ன ? அதற்கும் அஃப்ரீனாவிற்கும் (ராஷ்மிகா) என்ன தொடர்பு..? உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைதான் சீதா ராமம் படத்தின் கதை.

நிச்சயம் ‘சீதா ராமம்’ ஒரு எபிக் திரைப்படம். ராணவ வீரராக வரும் துல்கர், தான் ஒரு காதல் இளவரசன் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். ஜெமினி கணேசனாக காதல் காட்சிகளில் உருக வைக்கும் துல்கர், ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

மிருணாள் தாகூர் இன்னும் கொஞ்சம் ஆழமான நடிப்பை கொடுத்திருக்கலாம். காமெடி கதாபாத்திரங்களாக காட்டப்படும் வெண்ணிலா கிசோர், முரளி சர்மாவின் கதாபாத்திரங்கள் பெரிதாக எடுபடவில்லை. கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பிற நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கின்றனர்.

படத்தின் ஒன்லைன் மிக சிம்பிளாக தெரிந்தாலும், அந்தக்கதையை அழகான காதல் ஓவியமாக மாற்றியிருக்கிறது திரைக்கதை. ஹனு ராகவபுடி மற்றும் படக்குழுவின் மெனக்கெடலுக்கு பாராட்டுகள். அதற்கு முழுக்க முழுக்க துணை நிற்கிறது பி.எஸ்.வினோத்தின் கேமாரா.

காஷ்மீரின் கொள்ளை அழகை அப்படியே காட்சிப்படுத்தியதாகட்டும், காதல் சம்பந்தமான காட்சிகளை நெஞ்சுக்கு அருகில் கொண்டு வந்ததாகட்டும் அனைத்து ஃப்ரேம்களும் அசத்தல். 1964 காலக்கட்டங்களை காட்சிப்படுத்த ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் எடுத்துக்கொண்ட சிரத்தை நிச்சயம் பாராட்டத்தக்கது.

சீதா ராமம் என தலைப்பு வைத்து இந்து முஸ்லீம் காதல் கதையை இயக்குனர் ஹனு கொண்டு சென்ற விதமும் விறுவிறுப்பான திரைக்கதையும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. காதல் கலந்த நாட்டுப்பற்று படமாக அனைவரும் பாரட்டை பெறும் படமாக சீதா ராமம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து ரசிக்கும் படமாக சீதா ராமம் உள்ளது.

சீதா ராமம் – இது ஒரு காதல் காவியம்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *