full screen background image
Search
Monday 28 April 2025
  • :
  • :

மாமனிதன் திரைப்பட விமர்சனம்

படம்: மாமனிதன்

நடிப்பு: விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், ஷாஜி சென், ஜூவல் மேரி

தயாரிப்பு: யுவன் சங்கர் ராஜா

இசை: இளையராஜா, யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: எம். சுகுமார்

இயக்கம் சீனு ராமசாமி

ரிலீஸ் : ஆர் கே சுரேஷ்

பி ஆர் ஓ: நிகில் முருகன்

மாமனிதன் திரைப்பட ரேட்டிங்: 3/5

தேனி பண்ணைபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுபவர் விஜய் சேதுபதி. தன் ஆட்டோ வில் பயணிக்கும் பெரியவர் ஒருவர் மகள் திருமணத்துக்கு வாங்கிய நகையை தவறவிட்டு செல் கிறார். அவர் வீட்டுக்கு சென்று நகையை ஒப்படைக்கும் விஜய்சேதுபதி பெரியவரின் மகள் காயத்ரி அழகில் மயங்குகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் காயத்ரியை மணக்கிறார். பிள்ளைகளை கான்வென்ட்டில் படிக்க வைக்க எண்ணும் விஜய்சேதுபதி அதற்காக கூடுதலாக சம்பதிக்க எண்ணி ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆகிறார். ஊர்மக் களிடம் பணம் வாங்கி நிலத் துக்கு சொந்தக்காரரிடம் அளிக்கிறார். மறுநாள் பத்திர பதிவு நடக்க உள்ள நிலையில் பணத்துடன் நில சொந்தக்காரர் ஏமாற்றிவிட்டு ஓடுகிறார். இதனால் விஜய்சேதுபதி மீது பழி விழுகிறது. ஊர்மக்கள் அவர் மீது போலீஸில் புகார் தருகின்றனர். தன்னை கைது செய்துவிட்டால் தன் குடும்பம் அனாதையாகிவிடும் என்றெண்ணும் விஜய்சேதுபதி ஊரிலிருந்து தப்பித்து பணத்தை ஏமாற்றியவரை தேடி கேரளா செல்கிறார். விஜய் சேதுபதியால் அந்த ஏமாற்றுக்காரரை கண்டு பிடிக்க முடிந்ததா? அவரது குடும்பம் என்னவானது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

சில படங்கள் சினிமாத்தனம் இல்லாமல் வாழ்க்கையின் எதார்த்தை மையமாக வைத்து உருவாகும் அந்த வகை படம்தான் மாமனிதன்.பண்ணைப்புரத்தின் முதல் ஆட்டோ ஓட்டுனர் என்ற பெருமையுடன் விஜய்சேதுபதி தனது குடும்பத்துடன் கீழடுக்கு நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தனது குழந்தைகளும் பெரிய வீட்டுப் பிள்ளைகள் போல ஆங்கிலம் பேசும் பள்ளியில் படிக்க வேண்டும் என நினைத்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட, அவரைக் காண்பித்து பணத்தை வசூலித்த ரியல் எஸ்டேட் முதலாளி ஓடிவிட இவரும் குடும்பத்தை பிரிந்து தலைமறைவாகிறார்.

கேரளா, காசி என்று சுற்றித் திரிந்த விஜய் சேதுபதி என்ன ஆனார், அவர் குடும்பம் என்ன ஆனது என்பதெல்லாம் உணர்ச்சிக் காவியம்.

விஜய் சேதுபதி நடிப்பின் அதல நீளம் என்னென்ன என்று சரியாகத் தெரிந்து வைத்திருக்கும் சீனுராமசாமி இந்த படத்தில் அவருக்காகவே இந்த பாத்திரத்தை படைத்திருக்கிறார். காயத்ரியின் அப்பா விஜய் சேதுபதியின் ஆட்டோவில் மகள் திருமணத்துக்கு வாங்கிய நகைகளை தவற விட்டுப்போக, அதை அவர் வீட்டில் கொண்டு சேர்க்கும் நேர்மையே அவர் மீதான நல்லெண்ணத்தை காயத்ரிக்கு ஏற்படுத்துகிறது.

“இனிமே பார் என் ஆட்டத்தை…” இன்று ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கும்போது ஆகட்டும், அங்கே தான் பகடைக்காயாக பயன்பட்டு விட்டது தெரிந்தது மருகும்போது ஆகட்டும் வீட்டைவிட்டு ஓடுவதைக் கூட குழந்தைகளிடம் நயம்பட சொல்லிவிட்டு செல்வதாகட்டும், அதற்குப்பின் வருடக்கணக்கில் குடும்பத்தை பார்க்காமல் தனித்து இருப்பதில் ஆகட்டும் விஜய் சேதுபதி நடிப்பின் அடுத்த கட்டத்தைத் தொட்டிருக்கிறார்.

அதிலும் தன் உயிர் நண்பன் வாப்பாவிடம் தன் சூழலை சொல்லி தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ளச் சொல்லும் கட்டம் நடிப்பு பிரியர்களுக்கு நவரச விருந்து. அந்த பிரேமை கொஞ்சம் கூட ஆட்டாமல் அசைக்காமல் அவர் நடிப்புக்காகவே கேமராவை ஆணி அடித்து வைத்து எடுத்து வைத்து விட்டார் இயக்குனர்.

அவருக்கு ஈடாக ஆனால் அலட்டிக்கொள்ளாத அறத்துடன் வரும் காயத்ரி நம்மை வெகுவாக கவர்கிறார். தன் ஒழுக்கத்தை தவறாக பேசும் அண்ணனை அடிக்க குழவிக் கல்லால் தாக்க முற்படும் போது ஆகட்டும் அந்த நிமிடமே விஜய் சேதுபதி வந்து என்னுடன் வா என்று அழைக்கும் போது அவர் பின்னாலேயே பூனைக்குட்டி போல் வாழ்க்கையை தொடர்வது ஆகட்டும் காயத்ரியின் நடிப்பு வேறு உயரம்.

இவர்களுக்கு சற்றும் சளைக்காத ஒரு இஸ்லாமியரின் பாத்திரத்தில் வருகிறார் குரு சோமசுந்தரம். நடிப்பில் இயல்பான தன்மையுடன் இவரைப் போன்று நடிக்க தமிழில் ஆள் இல்லை என்று சொல்ல முடியும். உண்மையில் பார்க்கப்போனால் படத்தின் மாமனிதன் இவர்தான். இவருடைய பாத்திரம் நடிப்பில் ஒரு அட்சய பாத்திரம்.

அத்துடன் கேரளாவில் விஜய்சேதுபதிக்கு ஆதரவு கரம் நீட்டும் கிறிஸ்தவ பெண்மணி மற்றும் நண்பர்கள் மனதில் நிற்கிறார்கள. இவர்களில் அனிகாவும் நம் கருத்தை கவரும் ஒரு பாத்திரம்.

அங்கங்கே உணர்ச்சிகரமான காட்சிகளில் வரும் போதெல்லாம் நமக்கு பீறிடும் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவ்வளவு உணர்ச்சிகரமான காட்சிகளை வைத்து படத்தை இயக்கியிருக்கும் சீனுராமசாமி தமிழின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஆகிறார்.

படத்தின் ஒரே ஒரு குறையாக படுவது காயத்ரியை அத்தனை பெரிய துன்பத்தில் ஆழ்த்திவிட்டு விஜய்சேதுபதி தலைமறைவாகி விட அவர்கள் சந்திக்கும் கட்டத்தில் விஜய் சேதுபதியின் காலில் காயத்திரி விழுவது தான். நியாயப்படி தன்னால் அத்தனை துன்பங்களையும் அனுபவித்த காயத்ரி காலில் தான் விஜய் சேதுபதி விழுந்திருக்க வேண்டும் – ஹீரோயிசம் வெல்லும் இடம் அது.இயக்குனர் சீனு ராமசாமி வழக்கம்போல் தன்னுடைய ஸ்டைலில் மண் மனத்தோடு கூடிய ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வியலை தான் இந்த படத்தில் பேசி இருக்கிறார். படத்தின் கதை அருமையாக இருந்தாலும், திரைக்கதையில் கோட்டைவிட்டுள்ளார் என்றே சொல்லலாம். முதல் பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் வேகமெடுக்கும் என ஆவலோடு காத்திருந்தால் ஏமாற்றமே மிஞ்சியது.

யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா என இரண்டு இசை அரசர்கள் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தாலும், பாடல்களோ பின்னணி இசையோ மனதில் பதியும்படி இல்லாதது படத்திற்கு பின்னடைவாக தெரிகிறது. சுகுமாரின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘மாமனிதன்’சாத்தாமனிதன் அவ்வளவுதான்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *