full screen background image
Search
Sunday 19 January 2025
  • :
  • :

நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி

நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி

விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, ‘கன்னிராசி படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார். இது போன்ற படங்களை இயக்குநர் முத்துக்குமரன் நிறைய தர வேண்டும். விருது வாங்கும் அளவிற்கு படங்கள் எல்லாம் தேவையில்லை. ஏன் என்றால் நாம் எப்படி எடுத்தாலும் விருது கிடைக்காது. 5 வருடம் இதுதான் நிலைமை. இப்படத்தில் இயக்குநர் ஒரு அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதாவது காதலித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிருக்கிறார்” என்றார்.

ரோபோ சங்கர் பேசும்போது, ‘தயாரிப்பாளர் எங்களுக்கு மிகவும் பிடித்த இடத்தில் சூட்டிங் வைத்து வாரவாரம் பிரியாணி போட்டார். அவருக்கும் மிகவும் நன்றி. இயக்குநர் மிக கூலான மனிதர். காலையில் 11 மணிக்குத் தான் எங்களை சூட்டிங் கூப்பிடுவார். வரலட்சுமி இந்தப்படத்தில் ஒரு பொண்ணாக நடித்துள்ளார். அது எப்பவாவது தான் அமையும். என் மாப்பிள்ளை விமலுக்கு இந்தப்படம் பெரிய வெற்றிகரமாக அமையும்” என்றார்.

இயக்குநர் முத்துக்குமரன் பேசும்போது, ‘இந்தப்படம் தான் எனக்கு முதல் படம். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் சூப்பராக வொர்க் பண்ணிக் கொடுத்தார். அடுத்தப்படத்திலும் அவரோடு இணைவேன். மேலும் எடிட்டிர் ராஜா முகமது, ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பாடலாசிரியர் யுகபாரதி அண்ணனுக்கும் நன்றி. பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் இந்தப்படம் வெளிவர இருக்கிறது. யோகிபாபு, ரோபோ சங்கர் அண்ணன் இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். வரலட்சுமி இந்தப்படத்திற்கு என்ன தேவையோ அதை நடித்துக் கொடுத்தார். எந்தச் சிரமம் இருந்தாலும் அனுசரித்து நடித்துக் கொடுத்தார். நாம் என்ன சொன்னாலும் அதைச் அப்படியே செய்யக்கூடியவர் விமல். அதுபோல் நான் இயக்குநராக ஆனதற்கு முக்கியக் காரணம் அவர்தான். விமல் இல்லையென்றால் இப்படம் உருவாகி இருக்காது’ என்றார்.

வரலட்சுமி பேசும்போது, ‘பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்’ என்றார்.

விமல் பேசும்போது, ‘இந்தப்படம் மிக அருமையாக வந்திருக்கு. யோகிபாபு, ரோபோசங்கர், காளிவெங்கட் எல்லோர் கூடவும் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. அதனால படம் ரொம்ப ஜாலியாக இருக்கும். இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடு தான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்துவிடுவார். மேலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறேன். பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் முதல்முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன் என்று வரலட்சுமியை பற்றி கலகலப்பாக கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *