full screen background image
Search
Thursday 22 February 2024
  • :
  • :

திரையில் ஒரு புதிய முயற்சி ” 6 அத்தியாயம்”

திரையில் ஒரு புதிய முயற்சி
” 6 அத்தியாயம்” எனும் ‘ஹெக்ஸா’

முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை ஆறு இயக்குனர்கள் இயக்கியுள்ள முழு திரைப்படம் தான் இந்த 6 அத்தியாயம்.

‘ஹெக்ஸா’ என்றால் கிரேக்க மொழியில் எண் 6 -ஐக்குறிக்குமாம்.

இதில் என்ன புதுசு? என்று கேட்பவர்களுக்கு “அமானுஷ்யத்தை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படும்” இது உலக அளவில் முதல் முயற்சி என்றே சொல்லப்படுகிறது.

இது ஒரு பரபர திகில் படம் தான் என்றாலும் ஆறு அத்தியாயமும், படம் பார்ப்பவர்களுக்கு அறுசுவை உணவுண்ட திருப்தியைத் தரும்.

பிரபல எழுத்தாளரும், மனிதன், சென்னையில் ஒரு நாள், வன யுத்தம் போன்ற படங்களின் வசனகர்த்தாவும் வனமகன், நேத்ரா ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி வருபவருமாகிய அஜயன் பாலா அவர்கள், ஒர் அத்தியாயத்தை எழுதி முதல் முறையாய் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான “கேபிள் சங்கர்” ஒரு அத்தியாயத்தை எழுதி இயக்கியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் படத்தின் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

அமெரிக்க நியுஜெர்ஸி பிலிம் ஸ்கூலில் திரைப்பட உருவாக்கம் குறித்து கற்ற சங்கர் தியாகராஜன், இந்த படத்தை தயாரிப்பதுடன், ஆறு அத்தியாயங்களில் ஒர் அத்தியாயத்தை இயக்கியும் உள்ளார்.

இவர்களுடன் மர்ம் தேசம் முதல் ஜீபூம்பா வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகின் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் ஒவ்வொரு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.

‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தொட்டால் தொடரும்’ போன்ற படங்களில் நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்செய், ‘நான் மகான் அல்ல’ வினோத், பேபி, வீர சிவாஜி, நிசப்தம் படங்களில் நடித்த பேபி சாத்தன்யா மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோருடன் மேலும் பல பதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

சீனியர் கலைஞர்களான சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களில் ஒளிப்பதிவு செய்ய, பிரபல புகைப்பட கலைஞர் பொன். காசிராஜன் இப்படத்தின் ஒர் அத்தியாயத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக களம் இறங்குறார். இவர்களைத் தவிர புதியவர்களான அருண் மணி பழனி, அருண்மொழி சோழன் மற்றும் மனோ ராஜா ஒளிப்பதிவாளர்களாய் பணியாற்றியுள்ளனர்.

இசையில் பிரபல இசையமைப்பாளர் தாஜ்நூர், சாம், ஆகியோருடன் ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் போன்ற வளரும் இசைக் கலைஞர்கள் புதிய இசையமைப்பாளர்களாக அறிமுகமாகியுள்ளனர்.

‘தீம் சாங்’ எனப்படும் கருத்துப் பாடலை பிரபல நடிகர், விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இப்படத்திற்காக புரியாத புதிர் புகழ் சி.எஸ்.சாம் இசையில் ஒர் ஷூயூர் ஷாட் சூப்பர் ஹிட் பாடலை பாடியிருக்கிறார்.

மேலும் இப்பாடல், நடனக் கலைஞர்களை கொண்டு, படம் ஆக்கப்பட்டு, அதை 2டி அனிமேஷனாக மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தயாரித்துள்ள சங்கர் தியாகராஜன், பல உலக புகழ் பெற்ற பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களில் அமெரிக்காவில் பணிபுரிந்து, தாயகம் திரும்பிய இந்த சேலத்துக்காரர். ஐபோன், ஆண்டிராய்ட் போன்களில் பிரபலமான ‘ப்ளாஷ் கார்ட்ஸ் தமிழ் லெசன்ஸ்’ என்னும் ஆப்- யை வடிவமைத்து, பெங்களூரில் ‘வண்ணால மொபல் ஆப்ஸ் (பி) லிமிடேட்’ என்னும், மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார். இப்படத்தை ”ஆஸ்கி மீடியா ஹட்” எனும் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

”6 அத்தியாயம்” எனும் ஹெக்ஸா’ திரையில் ஒரு புதிய அனுபவம் தர இன்னும் சில மாதங்களில் வெளியாகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *