full screen background image
Search
Saturday 25 January 2025
  • :
  • :

96′ Movie 100th day celebration news

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.
இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி பிரேம்குமார் , இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி எஸ் மித்ரன், லெனின் பாரதி மற்றும் சமூக போரளியும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திருமுருகன் காந்தி பேசுகையில்,“இந்த வெற்றிவிழாவிற்குஇயக்குநர் பிரேம்குமார் ஏன் எனக்கு அழைப்பு விடுத்தார் என்று தற்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் நாங்கள் சனிக்கிழமை ராஜபக்சேவிற்கு கருப்புகொடி காட்ட வேண்டும். ஞாயிற்றுக் கிழமை மோடிக்கு கருப்பு கொடி காட்டவேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் சூழலில் 96படத்தின் நூறாவது நாள் விழாவில் என்னை கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். எங்களுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

என்னுடைய தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் நான் பார்த்த முதல் திரைப்படம் 96.படம் அற்புதமாக இருந்தது.ஆனால்இந்த படத்தில் இன்னும் சில விசயங்கள் சொல்லியிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது. காதல் என்பது ஒரு அற்புதமான விசயம். இன்று நாம் பல செய்திகளை கேள்விப்படுகிறோம். பார்க்கிறோம். காதலித்த பெண்ணையே கொலை செய்து விடுகிறார்கள். ஆசிட் வீசுகிறார்கள். காதலித்த பெண்ணை எப்படி அப்படி செய்ய முடியும்.?எங்கே கோளாறு இருக்கிறது என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம். இது போன்ற தகவல்கள் ஊடகங்களில்அதிகமாக வெளியாகும் சமயத்தில், எப்படி காதலை கொண்டாடுவது, எப்படி பெண்களைக் கொண்டாடுவது, எப்படி இயற்கையை கொண்டாடுவது போன்றவற்றை பேசும் 96 படம் வெளியாகியிருக்கிறது. காதல் என்பது மனிதர்களுக்குள் மட்டுமே வரக்கூடிய உணர்வு அல்ல,இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களிடத்திலும் இருக்கும் அடிப்படை குணாதிசயம்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனத்தைப்போல் காதல் என்பது காலத்துடன் பிணைத்துக் கொண்டிருக்கிறது.காதல்என்பது காலத்தின்இனிமை, காதல் என்பது நேசத்துடன்கூடிய ஒரு உணர்வு.
படத்தில் நிகழ்காலம் முழுவதும் இரவிலும், கடந்த காலம் முழுவதும் பகலிலும் நடைபெறும் காட்சிகளாக இடம்பெற்றிருக்கும்.இதுவும்நன்றாக இருந்தது. காதல் என்பது ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ முடிவதில்லை அதையும் கடந்து அன்பு என்பது இயற்கையை நேசிக்கவேண்டும் என்பதை சொல்லியிருக்கிறார். அதை படத்தின் முதல் பாடலிலேயேதெளிவாக சொல்கிறார் இயக்குநர். காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால்அந்த ஆண் வெறுப்புக்கு ஆளாகாமல், வன்மத்திற்கு இடம் கொடுக்காமல் இயற்கையை நேசிப்பவராக, பேரன்பு மிக்கவராக மாறுவதை அந்த முதல் பாடல் எடுத்துக்காட்டும் போது நாமும் மாறிவிடுகிறோம்.
அண்மைக்காலத்தில் எனக்கு பிடித்த நடிகராக விஜய்சேதுபதி இருக்கிறார்.இதைத்தான்ஒரு பேட்டியிலும் சொன்னேன். இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக அவர் இருக்கிறார். இன்றைய சம கால இளைஞர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளையெல்லாம் சந்திக்கிறார்களோ ,எதையெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு எதுவெல்லாம் மேனரிஸமாக இருக்கிறதோ, எதெல்லாம் கனவாக இருக்கிறதோ அதையெல்லாம் திரையில் பிரதிபலிப்பவராக விஜய்சேதுபதி இருக்கிறார். இப்படிபட்ட ஒரு கலைஞனாகத்தான் விஜய்சேதுபதியை இந்த தருணத்தில் நான் பார்க்கிறேன்.

இன்றைய சினிமாவில் வரக்கூடிய ஹீரோக்கள் எல்லாம் சூப்பர் ஹியூமனாகவேஇருக்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி நம்மைப் போன்ற சாதாரண மனிதராக திரையில் தோன்றுகிறார். அதனாலேயே அனைவராலும் நேசிக்கக்கூடிய கலைஞராக முடிகிறது. தற்போது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இவர்களை போன்றவர்கள் தான் மக்களிடத்தில் எளிதாக சென்றடைய இயலுகிறது.

திரிஷாவும் அற்புதமாக நடித்திருந்தார். இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது,
‘இரும்பு பிசிறாக நீளும்
நானிருக்க
நீ செல்லும் ரயில்’
என்ற அறிவுமதியின் கவிதைத்தான் நினைவுக்கு வருகிறது.
‘மல்லிகையின் வாசம்
மழையின் நேசம்
எதுவும் அதுவாக இல்லை.
எல்லாம் அவளின் நினைவுகளாகவே இருக்கிறது.”
என்ற என்னுடைய நண்பரின் கவிதையும் நினைவிற்கு வருகிறது.
இன்றைய தேதியில் செல்போன் இருப்பதால் நாம் நினைத்ததை உடனடியாக பேசிவிடுகிறோம். பிடித்ததையும், பேசிவிடுகிறோம். பிடிக்காததையும் பேசிவிடுகிறோம். ஆனால் செல்போன் இல்லாத காலத்தில் நாம் நினைத்ததை நேரடியாக சென்று சொல்லிய அல்லது சொல்ல தவறிய அனுபவத்தை இந்த படம் அற்புதமாக பேசியிருக்கிறது.
இந்த படத்திற்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு காதல் தான். நாங்கள் மனிதர்களை காதலிக்கிறோம். இயற்கையை நேசிக்கிறோம்.அதனால் போராடுகிறோம். இது தான் உண்மை.” என்றார்.

விஜய் சேதுபதி பேசுகையில்,“இந்த விழாவிற்கு திருமுருகன்காந்தி வருகைத்தந்திருப்பது எனக்கு பெரிய சர்ப்ரைஸ்.நான் எதிர்பார்க்கவில்லை. அவரை காதலைப் பற்றி பேசவேண்டிய கட்டாயத்தை நாங்கள் அளித்துவிட்டோம். உங்களுடைய சிந்தனைக்கு நான் மிகப்பெரியரசிகன். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் பாசம் சகோதரரைப்போல் இருக்கிறது. அது இன்னும் பரவவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். படித்த ,புரிந்த, சிறந்த சிந்தனையாளரான நீங்கள், உங்களின் பேச்சு இன்னும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது என்னுடைய வேண்டுகோள். என்னை தவறாக புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பேசுகிறேன். எல்லா நல்ல விசயங்களும் அனைவரையும் சென்றடையவேண்டும். அது போய் சேரும் வகையில் உங்கள் பேச்சு இருக்கவேண்டும் என்று நான் உங்களின் ரசிகனாக எதிர்பார்க்கிறேன்.

இந்த படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘துக்ளக் ’ என்ற படத்தில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் நடிக்கிறேன்.”என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, விஜய் சேதுபதியும் திரிஷாவும் மேடையேறி ஒருவரையொருவர் ஆரத்தழுவியது வருகைத் தந்திருந்த அனைவரையும் கவர்ந்தது.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மேடையில் இந்த படத்தின் ஜீவனாக இருந்த பின்னணியிசையை வாசித்து காட்டி ரசிகர்களை உற்சாகமடையவைத்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *