full screen background image
Search
Thursday 23 January 2025
  • :
  • :

Pink Auto Launch

ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3232 Ann’s Forum வழங்கும் Honey queens fiesta என்ற நிகழ்ச்சி சென்னை கிரவுன் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிங்க் ஆட்டோ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. விழாவில் கலையரசி என்ற பயனாளிக்கு ஆட்டோ வழங்கப்பட்டது. Ann’s Forum சார்பில் இந்த திட்டங்களுக்காக 6 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசினர். நம்ம சென்னையில் தான் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் முதலில் செயல்படுத்தப்படுகிறது. ஒரு ஆட்டோவின் விலை 1.80 லட்சம், நமக்காக 5 ஆயிரம் தள்ளுபடியில் 1.75 லட்சத்துக்கு தருகிறார்கள். 100 ஆட்டோக்கள் வாங்குவதாக உறுதி அளித்திருக்கிறோம்.

முதல் கட்டமாக 10 பெண்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம். அதில் ஒரு கலையரசி என்ற பயனாளிக்கு முதல் ஆட்டோவை இன்று வழங்கியிருக்கிறோம் என்றார் நல்லம்மை ராமநாதன். இந்த ரோட்டரி கிளப் உடன் இணைந்து குயில் குப்பம் என்ற கிராமத்தில் உள்ள மக்களுக்கு 650 சதுர அடியில் பெரிய வீடு கட்டி தருகிறோம். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான பொருட்கள், ஃபர்னிச்சர்கள், ஒரு மாடு ஆகியவற்றையும் தருகிறோம். அந்த பகுதியில் ஒரு கம்யூனிட்டி செண்டரையும் கட்டி தருகிறோம். அரசிடம் பேசி நிலத்துக்கு பட்டா வாங்கி தருகிறோம். மொத்தம் 10 கோடி ரூபாயில் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். நான் என் சொந்த பணத்தில் இருந்து இரண்டரை கோடி ரூபாயை இந்த படத்துக்கு தருகிறேன். இதே மாதிரி அந்தந்த ஊர்களில் இருக்கும் ரோட்டரி கிளப்புகள் இணைந்து செயல்பட முன்வந்தால் தமிழ்னாடு எங்கேயோ போய் விடும் என்றார் அபிராமி ராமநாதன். அபிராமி ராமநாதன் சார் சொன்ன மாதிரி இந்த மாதிரி நல்ல விஷயங்களை செய்ய நல்ல மனசு தேவை. சினிமாவில் தான் இந்த மாதிரி விஷயங்களை நாம் பார்த்திருக்கிறோம், அதை ராமனாதன் சார் செயலில் காட்டியிருக்கிறார். இதை முன்மாதிரியாக எடுத்து நிறைய பேர் இதை செய்ய முன்வருவார்கள். இந்த மாதிரி ஒரு நல்ல நிகழ்வில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார் நடிகர் விக்ரம் பிரபு. சினிமாவில் பார்த்த ஒரு விஷயம் இங்கு நிஜத்தில் நடப்பது நல்ல விஷயம். பெண்கள் பாதுகாப்பு தற்போதைய மிக முக்கியமான விஷயம். மகளிருக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்டிருக்கும் இந்த பிங்க் ஆட்டோக்களில் ஜிபிஎஸ் வைத்து ஆட்டோவை கண்காணிக்கிறார்கள். இது பெண்கள் பாதுகாப்பை மிகவும் உறுதி செய்யும். இந்த பிங்க் ஆட்டோ மிகப்பெரிய வெற்றியை பெற்று, நயன்தாராவை நான் ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார் இயக்குனர் வெங்கட் பிரபு. கமிஷனரை இந்த விழாவுக்கு அழைக்க தான் முதலில் வந்தார்கள், ஒரு அதிர்ஷ்டவசமான சூழலில் இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. காவல்துறையை சேர்ந்த குடும்பங்களுக்கு நாங்களே நிறைய நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இருந்தோம். இந்த வேளையில் ரோட்டரி கிளப் இந்த முன்னெடுப்பை எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2015ல் She Auto என்ற பெயரில் ஆந்திராவில் இந்த மாதிரி ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சென்னையில் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் கொண்டு வரப்பட்டது மிகவும் நல்ல விஷயம். சென்னையில் பெண்கள் பாதுகாப்புக்கு அரசும் மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. சென்னையில் கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில் துவங்கப்பட்டிருக்கும் இந்த பிங்க் ஆட்டோ திட்டமும் வரவேற்கத்தக்கது என்றார் இணை ஆணையர் சி.மகேஸ்வரி. நடிகர் சுப்பு பஞ்சு, ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சாந்திராஜன் நன்றியுரை வழங்கினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *