full screen background image
Search
Saturday 25 January 2025
  • :
  • :

அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன – சீமத்துரை படக்குழு வேதனை

அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன – சீமத்துரை படக்குழு வேதனை

’சீமத்துரை’ என்னும் பெயரை கேட்டாலே நமக்கு கிராமங்களும் அங்கே வெள்ளந்தியாக திரியும் இளைஞர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். கிராமங்களில் வாழும் ஒவ்வொரு இளவட்ட வாலிபர்களுமே சீமத்துரை தான். அப்படி எங்கள் பகுதியான பட்டுக்கோட்டையை சுற்றி நடந்த உண்மை சம்பவங்களை வைத்துதான் இந்த படத்தை எடுத்து இருக்கிறோம்.

காலம் மாறினாலும் பிரச்சினைகள் மட்டும் மாறாது என்பார்கள். அந்த மாதிரி இன்றைக்கும் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவானது தான் சீமத்துரை படம். கிராம மக்களுக்கு அருவா, கத்தி மட்டும் ஆயுதம் அல்ல. பாசமும் ஒரு ஆயுதம் தான். பாசத்துக்கும் கர்வத்துக்கும் இடையே நடக்கிற போராட்டத்தை வாழ்வியலோடு பதிவு செய்து இருக்கிறோம். சீமத்துரை என்னும் தலைப்புக்கேற்றாற்போல் காதல், கலாட்டா, கலவரம் என்று எல்லாம் கலந்த ஒரு படமாக சீமத்துரை இருக்கும்.

படத்தில் கீதன் கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் ஊர் ஊராக சென்று கருவாடு விற்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ’நான் மகான் அல்ல’ மகேந்திரன், ’கயல்’ வின்செண்ட் ஆகியோர் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர். ஆதேஷ் பாலா, மதயானை கூட்டம் காசி மாயன், மேடை கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் பேசும்போது, ‘ தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையை சுற்றி தான் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பட்டுக்கோட்டையை சுற்றி உயர்ந்து நின்ற தென்னை மரங்கள் படத்தில் முக்கியமாக பதிவு செய்தோம். ஆனால் அந்த தென்னை மரங்களை கஜா புயல் சுத்தமாக அழித்துவிட்டது. நாங்கள் அழகாக படம் பிடித்த பகுதிகள் இன்று அலங்கோலமாக கிடப்பதை பார்க்கும்போது படக்குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்து மக்கள் எங்களை அவர்கள் குடும்பங்களில் ஒருவராக நடத்தினார்கள். அவர்கள் மீண்டு எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.’ என்றார்.

இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின், ஒளிப்பதிவு – D திருஞான சம்பந்தம், படத்தொகுப்பு – T வீர செந்தில்ராஜ், பாடல்கள் – அண்ணாமலை, நடனம் – சந்தோஷ் முருகன்,

தயாரிப்பு
புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா

இணை தயாரிப்பு
ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
சந்தோஷ் தியாகராஜன்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *