‘செக்க சிவந்த வானம்’ – திரைப்பட விமர்சனம்
பண பலம், ஆள் பலம், அரசியல் பலம், அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு பினாமி என ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபதியான சேனாபதியை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. சேனாபதியின் சிம்மாசனத்தில் தானே அமர வேண்டும் என அவரது மூன்று மகன்களான வரதன், தியாகு, எத்திராஜ் ஆசைப்பட, மூவருக்குள்ளும் யுத்தம் தொடங்குகிறது. இதற்கிடையே, சேனாபதியை கொல்ல முயற்சித்தது யார் என்கிற கேள்விக்கான தேடுதலும் தொடர, சுவாரஸ்யமான திருப்பங்களுடன் பதில் சொல்கிறது இரண்டாம் பாதி.
‘மணிரத்னத்திடம் சரக்கு தீர்ந்துவிட்டது’ ‘என்ன படம் எடுக்குறதுன்னு தெரியாம, மனுஷன் காதல் படமா எடுத்துட்டு இருக்காரு’ ‘பேசாம படம் எடுக்குறதையே நிறுத்திடலாமே’ என பலவிதமான அறிவுரைகள் சொன்ன அத்தனை பேருக்கும் ஒரு தரமான கேங்க்ஸ்டர் படத்தின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் மணிரத்னம். அதை விட, மிக முக்கியமான விஷயம் – தன்னுடைய பாணியிலான வழக்கமான சில விஷயங்களையும் மாற்றிக் கொண்டுள்ளார். மணிரத்னம் படத்தில் நடிகர்கள் சத்தமாகவும், ஓரிரு வார்த்தைகளில் மட்டும் பேசாமல் நீளமான வசனங்கள் பேசுவதையும் பார்ப்பதே ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தனது கேரியரில் ‘அக்னி நட்சத்திரம்’, ‘திருடா திருடா’, ‘ஆயுத எழுத்து’ என அவ்வப்பொழுது முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து சில அட்டகாசமான திரைப்படங்களை கொடுப்பார் மணிரத்னம். டிரைலரை பார்க்கையில், அப்படியொரு திரைப்படமாக ‘செக்க சிவந்த வானம்’ இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது; அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் மணிரத்னம்.
பணம், பதவிக்கான போட்டிக்காக பல கதாபாத்திரங்கள் மோதிக்கொள்வதையும், துரோகங்களையும் சுற்றி நகரும் த்ரில்லர் டிராமா கதைகள் ஹாலிவுட், பாலிவுட் அளவுக்கு இங்கே அதிகம் பிரபலம் இல்லையென்பதால், தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது கொஞ்சம் ஃபிரெஷ்ஷான கதைக்களம். அதிக ட்விஸ்ட்கள் ஏதும் இல்லாவிடினும் கூட, இருக்கும் ஒரு சில சஸ்பென்ஸை மிக நேர்த்தியாக இறுதி வரை எடுத்து சென்றிருக்கிறார்கள். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியும் அதற்கு முந்தைய அரைமணி நேரமும் பிரமாதமாக இருந்தது.
இரண்டே கால் மணிநேரம் ஓடும் திரைப்படத்தில் கதையிலிருந்து எங்கும் விலகாமலும், பாடல்களில் அதிக நேரத்தை கழிக்காமலும் இருந்தது மிகப்பெரிய பிளஸ். வரதன், தியாகு, எத்தி, ரசூல் என 4 கேரக்டர்களுக்கும் மிக சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்ததும், யாருக்குமே ஹீரோ-வில்லன் என எந்த முத்திரையும் இல்லாதபடி பாத்திர படைப்பு இருந்ததும் இன்னும் சிறப்பு. ஒவ்வொரு பாத்திர படைப்புமே அவ்வளவு நேர்த்தியாக இருந்தது; ஏதோ ஒரு ட்விஸ்ட்க்காக பாத்திரங்களின் குணத்தை மாற்றாமல், பாத்திரங்களின் போக்கில் கதையை கொண்டு சென்றதால் எளிதாக படத்துடன் ஒன்ற முடிந்தது. பாத்திரத்துக்கேற்ற நடிகர் தேர்வும், கதைக்கு எது தேவையோ அதை சரியாக கொடுத்த நடிகர்களின் பங்களிப்பும், ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பின்னணி இசை மற்றும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு உள்ளிட்ட டெக்னிக்கல் அம்சங்களும் படத்தின் பெரும்பலம்.
சொடுக்கு போட்டு பேசுவது, ஒரே நொடியில் கோபத்தின் உச்சத்தை தொடுவது, தான் செய்த தவறுக்காக அழுவது என வரதன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் அரவிந்த்சுவாமி. சேனாபதியின் இருக்கைக்கான ஆசையை கண்களிலேயே காட்டுவது, சின்ன சின்ன முகபாவனைகளிலும் கவனிக்க வைப்பது என அருண் விஜயின் கேரியரில் இது ரொம்பவே முக்கியமான திரைப்படமாக இருக்கும். தேவைக்கு அதிகமாக பேசாமல், கதைக்கு தேவையானபடி மட்டும் நடிக்கும் சிம்பு எத்தனை அழகாக இருக்கிறார்!! கிளைமாக்ஸிலும் வேறு சில காட்சிகளிலும் அவரது வசன உச்சரிப்பை பார்க்கையில், சிம்பு அளவிற்கு வேறு யாரும் இந்த பாத்திரத்தில் சரியாக இருந்திருக்க மாட்டார்கள் என்றே தோன்றியது. சிம்புவின் தொப்பை மட்டுமே மிகப்பெரிய திருஷ்டியாக இருந்தது; கடைக்குட்டி என சொல்லப்படும் சிம்பு, பல காட்சிகளில் அருண் விஜய்க்கு அண்ணன் போலவே தெரிந்தார். அதிகம் அலட்டாமல் அடக்கி வாசித்தே அப்ளாஸ் அள்ளுகிறார் விஜய் சேதுபதி; ‘அவ்ளோதான், வீடு முடிஞ்சது’ என சிம்புவிடம் சொல்வது, சின்னப்பதாஸ் வீட்டில் டீ கேட்பது, விபச்சார விடுதியிலிருந்து நழுவ ‘என்கிட்ட காசில்ல’ என சொல்வது என இவர் வரும் காட்சிகள் எல்லாம் படத்தின் சீரியஸான மூடில் இருந்து சற்றே விலகி கலகலப்பு சேர்க்கிறது. நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் இருக்கக்கூடிய வேடத்தில் தோன்றியிருக்கும் ஜோதிகா, அதை சரியாக பயன்படுத்திக்கொண்டும் உள்ளார். மற்ற நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா போன்றோருக்கு நடிப்பதற்கு பெரிய வாய்ப்புகள் ஏதுமில்லை; கதை நகர்வதற்கு சிறிய அளவில் உதவியுள்ளனர். படம் முழுக்கவே, எல்லா நடிகர்களின் ஆடை வடிவமைப்பும் அட்டகாசமாக இருந்தது.
திரைக்கதை மற்றும் கதை சொல்லப்பட்ட விதத்தில் ‘Godfather’ ‘Departed’ போன்ற படங்களின் சாயல் இருப்பதை தாண்டி, பாத்திரப்படைப்புகள் மற்றும் இரண்டாம் பாதியின் காட்சிகள் மற்றும் திருப்பங்களில், 2013ஆம் ஆண்டில் வெளியான கொரியன் படமான ‘New World’ திரைப்படத்தின் தாக்கம் ரொம்பவே அதிகமாக தெரிந்தது.
ஒரு சில குறைகளை தவிர்த்து பார்த்தால், ‘செக்க சிவந்த வானம்’ ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். ❤ மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு தரமான கேங்க்ஸ்டர் திரைப்படம்!