சென்னை வளசரவாக்கத்தில் கழிவு நீர் கால் வாயில் இருந்து மீட்கப்பட்ட எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிசிசை பெற்ற பச்சிளம் குழந்தையின் தொடர் பாதுகாப்பிற்காக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் அவர்களிடம் ஒப்படைப்பு !
(18.09.2018) சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வளசரவாக்கம் பகுதியில் கழிவு நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தையின் தொடர் பாதுகாப்பிற்காக மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா அவர்களிடம் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் ஒப்படைத்தார். சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்.நகரில் திருமதி கீதா என்பவரால் பிறந்த சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கழிவு நீர் கால்வாயில் இருந்து 15.08.2018 அன்று கண்டெடுக்கப்பட்டு, சின்னப்போரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை பச்சிளங் குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது, கழிவு நீர் கால்வாயில் இருந்து பச்சிளம் குழந்தையை மீட்டெடுத்த திருமதி கீதா என்பவரை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டினார். பின்பு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த குழந்தையை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு குழந்தைக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து குழந்தையை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கவும், குழந்தைக்கு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் அளிக்கவும் அறிவுரை வழங்கினார். கிருமிகளால் நோய்த் தொற்று ஏற்பட்ட குழந்தைக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையும் தேவையான தடுப்பூசியும் போடப்பட்டது. தாய் ஆதரவற்ற இக்குழந்தைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்ட நாள் முதல் தாய்ப்பால் வங்கி மூலம் பெறப்பட்ட தாய்ப்பால் வழங்கப்பட்டது. தற்போது இக்குழந்தை நோய்த் தொற்று குணமடைந்து எடை சீராகவும் உடல் ஆரோக்கியமாகவும் உள்ளது. இக்குழந்தையை தொடர் பாதுகாப்பிற்காக மேற்கொண்டு பராமரித்திட சமூக நலத்துறையிடம் இன்று (18.09.2018) உரிய முறையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது..