போற்றுதலுக்குரிய மகான் ஆச்சாரிய ஸ்ரீ மஹாஷ்ரமாஞ்சி மூன்று பெண்களின் துறவு வாழ்க்கையைத் தொடங்கி வைத்தார்!
ஜைன மதத்தின், ஸ்வதம்பர் டெராபந்த் என்ற மார்க்கத்தின் பதினோராவது தலைமை குரு, 4 மாத பயணமாக சென்னைக்கு வருகை தந்துள்ளார்!
சென்னை, 18 ஜூலை 2018
ஜைன மதத்தின் ஸ்வதம்பர் டெராபந்த் மார்க்கத்தின் போற்றுதலுக்குரிய மகான், பதினோராவது தலைமை குருவான ஆச்சார்ய ஸ்ரீ மஹாஷ்ரமாஞ்சி, தனது புனிதப் பயணத்தில், தற்போது சென்னையில் நான்கு மாதங்கள் வரை தங்கியிருந்து, ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஜைன மத தலைமை துறவி ஒருவரின் சென்னை வருகை 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதே, இவரது தற்போதைய வருகையின் முக்கியத்துவத்தை உணர்த்தும். கடந்த பயணத்தின்போது, அன்றைய தமிழக அரசு சார்பில் முதல்வராக இருந்த மறைந்த திரு. சி என் அண்ணாதுரை அவர்கள் அப்போதைய தலைமை குருவை வரவேற்று கவுரவித்தார்.
ஸ்வதம்பர் டெராபந்த் மார்க்கத்தின் போற்றுதலுக்குரிய மகான், பதினோராவது தலைமை குருவான ஆச்சார்ய ஸ்ரீ மஹாஷ்ரமாஞ்சி, ஜைன மத வழக்கப்படி துறவறம் மேற்கொள்வதற்கான காரியங்களை நடத்தி, இன்று (ஜூலை 18, 2018) மூன்று பெண்களின் முறைப்படியான துறவறத்தைத் தொடங்கி வைத்தார்.
குஷ்பூ ஆச்சா (வயது: 31, கல்வி தகுதி: எம்.ஏ., எம். பி.ஏ., தந்தை: மதன்லால் ஆச்சா, தாய்: சந்தோஷ் ஆச்சா, சென்னையில் கல்விப் பயின்று பெங்களூரில் வசிக்கிறார்), ஹெத்தல் சுரானா (வயது: 29, கல்வி தகுதி: பி.காம்., எம்.ஏ., தந்தை: கிஷோர் சுரானா, தாய்: சஞ்சூ பாலா சுரானா, கல்வி மற்றும் குடியிருப்பு: ஔரங்காபாத், மகாராஷ்டிரா) மற்றும் அங்கிதா சேத்தியா (வயது: 24, கல்வி தகுதி: பி.காம்., தந்தை: அனில்ஜி சேத்தியா, தாய்: மீனா சேத்தியா, கல்வி மற்றும் குடியிருப்பு: ஔரங்காபாத், மகாராஷ்டிரா) எனும் இந்த 3 பெண்களும் நன்கு படித்த, கலாச்சாரம் மிக்க, ஆழ்ந்த இறை நம்பிக்கையுள்ள, ஜைன மதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது முன்னோர்களும், பெற்றோர்களும் டெராபந்த் ஜைன மத மார்க்கத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர்கள். துறவு மேற்கொள்ளும் இந்த 3 பெண்களும், அதற்கான கடுமையான சோதனைகளுக்கு முழுமையாக உட்படுத்தப்பட்டு, 6 ஆண்டுகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். துறவில் ஆர்வம் காட்டிய இந்த 3 பெண்களும் முதுநிலை பட்டம் வரை முறையாக படித்து மேலும் ராஜஸ்தானில் லாட்னன் என்ற இடத்தில் உள்ள பரமார்திக் கல்விக் கூடத்திலும் பயின்றவர்கள். ஜைன மதத்தில் – அனைத்தையும் மறுத்து துறவறம் மேற்கொள்ள விரும்புவோருக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வுகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளனர். அவ்வகையில் பற்று அற்ற வாழ்க்கையை மேற்கொள்வதற்கு, இந்த பெண்கள் தங்களைப் பக்குவப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த மூவருக்கும் வேறு புனிதப் பெயர் சூட்டப்படும். இனி, வாழ்நாள் முழுவதும், அந்த பெயரிலேயே குறிப்பிடப்படுவார்கள். ஜைன மத வழக்கப்படி, துறவறம் மேற்கொள்ள விரும்புவோருக்கு உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை. அவர்களது குடும்பப் பின்னணி, சம்மந்தப்பட்டவரின் மனோ நிலை, ஆன்மீகம் குறித்த அவரது பார்வை, நன்னடத்தை மற்றும் மத சடங்கு நம்பிக்கைகளை எந்த அளவு ஈடுபாட்டுடன் மேற்கொள்கிறார்கள் என்பது தொடர்ந்து மதிப்பீடு செய்து வந்து… இவை அனைத்தின் ஒட்டுமொத்த அடிப்படையில் மத குருதான் இறுதி முடிவு எடுப்பார். அப்படித்தான், தற்போது இந்த மூவரும் துறவறம் மேற்கொண்டுள்ளனர்.
ஜைன மதத் துறவறம் கடுமையான சோதனைகளில் எல்லாம் வெற்றி கண்டு, முன்னேறி வந்தால் மட்டுமே கைகூடும். தனது வெளிப்புறத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு, உடைகளை… அதன் போக்கை மாற்றிக் கொள்வதால் மட்டுமே இதைப் பெற்றுவிட முடியாது. ஜைன மத புனித வரிகளை… வேத வாக்கியங்களைக் கற்க வேண்டும். ஐம்புலன்களையும் கட்டுப்படுத்த வேண்டும். உலகின் பல்வேறு சுகங்களை மறுத்து, அவற்றிலிருந்து விலகி நிற்க வேண்டும். ஆன்மாவை பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற தகுதிகளும், பண்புகளும் துறவறம் குறித்த பரிசீலனைக்கே தேவைப்படுகின்றன. இந்த அனைத்து பண்புகளையும் ஒருவர் கைவரப் பெற்று, தொடர்ந்து கடைபிடித்து வருகிறார் என்ற நிலையில்… உலகின் இயல்பான லோகீக வாழ்க்கையில்… அதன் சுகங்களை உணர்வதில் அவருக்கு ஆர்வம் இல்லை என்பதை அறிய நேர்ந்தால், அதன்பிறகுதான் அவருக்கு துறவறம் அளிப்பது குறித்து பரிசீலிக்க இயலும். துறவு வாழ்வு மேற்கொள்வது என்பது அணையா விளக்கை ஏற்றுவதற்கு இணையானது. அது துறவறம் மேற்கொள்வோருக்கு, அவசியமல்லாதவற்றை கைவிடவும், நல்லவை எதுவோ அதை மட்டும பெறுவதற்கும் வழிகாட்டும். துறவு மேற்கொள்வதன் மூலம் அவர் தனது ஆன்மீக பயணத்தைத் தொடங்கிவிடுவதுடன், மீதமுள்ள வாழ்நாளில் பயணிக்க வேண்டிய பாதையில் நடக்கவும் தொடங்கிவிடுகிறார்.
ஊடகத் தொடர்பு: கே.பி. அமர்நாத், கேட்டலிஸ்ட் பிஆர் @ 9841825081.














