காரைக்காலில் தொடங்கிய ‘ஜிப்ஸி’யின் பயணம்
ராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது.
ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம்‘ஜிப்ஸி ’. இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.
குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. இதில் ஜீவா, இமாசல பிரதேச அழகி நடாசா சிங் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இதன் முதற்கட்ட படபிடிப்பு காரைக்காலில் இன்று தொடங்கியது. இதில் படக்குழுவினருடன் பாடலாசிரியர் யுகபாரதி கலந்து கொண்டார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
கீ, கொரில்லா ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி ’ படத்திற்கு படபிடிப்பு தொடங்கிய தருணத்திலேயே பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படபிடிப்பு இமாசல பிரதேசத்தில் நடைபெறவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தெரிவித்திருக்கிறார்.