மிக மிக அவசரம்… இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதை! – இயக்குநர் சுரேஷ் காமாட்சி
சுரேஷ் காமாட்சி…
தமிழ் சினிமாவின் இன்றைய பரபரப்பு நாயகன். குறிப்பாக தயாரிப்பாளர்கள் – நடிகர்கள் மத்தியில் சுரேஷ் காமாட்சி பெயருக்கு தனி கவனம் உண்டு.
அமைதிப்படை 2, கங்காரு என இரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார்.
அவர் முதல் முறையாக இயக்கும் படத்துக்கு மிக மிக அவசரம் என தலைப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு பிரச்சினையை இந்தப் படத்தில் முன்வைத்திருப்பதாகச் சொல்கிறார் சுரேஷ் காமாட்சி.
இயக்குநர் சுரேஷ் காமாட்சியுடன் ஒரு நேர்காணல்…
தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாறியது ஏன்?
முதலில் நான் ஒரு உதவி இயக்குநராகத்தான் இருந்தேன். இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் நோக்கமும் கூட. அமரர் மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படைக்கு தயாரிப்பாளரானேன். கங்காரு படத்துக்குப் பிறகு புதிய படம் செய்ய கதைகளை யோசித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் ஜெகன் சொன்ன இந்தக் கதை கவனத்தை ஈர்த்தது. அதைத்தான் மிக மிக அவசரம் எனப் படமாக்கியுள்ளேன்.
அப்படி என்ன கதை இது?
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகளிர் போலீசாரின் பாதுகாப்புக்காக எத்தனையே ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் உண்மையில் அதற்கு நேர்மாறான விஷயங்கள்தான் நடக்கின்றன. அதை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. மிக உணர்வுப்பூர்வமான கதை. திரையில் வரும்போது அதிர்வுகளை ஏற்படுத்தும்.
நடிகர் நடிகைகள்…
இந்தப் படம் கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களில் நடித்த ஸ்ரீஜா (ஸ்ரீபிரியங்கா) நாயகியாக நடித்துள்ளார். கோரிப்பாளையம் ஹரீஷ், வழக்கு எண் முத்துராமன், ஈ ராமதாஸ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். அண்ணன் சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பு முடிந்ததா.. ஏதேனும் சுவாரஸ்ய நிகழ்வுகள்?
99 சதவீதம் முடிந்துவிட்டது. இந்தப் படம் முழுவதுமே பவானிக்குப் பக்கத்தில் உள்ள கோனேரிப்பட்டி அணையில்தான் நடந்தது. பாக்யராஜ் சார் பவுனு பவுனுதான் படத்தை இங்குதான் எடுத்திருந்தார். அதன் பிறகு 25 ஆண்டுகள் வேறு படங்களுக்கு அங்கே அனுமதி தரவில்லை. போராடி நாங்கள் அனுமதி வாங்கி படமாக்கினோம். அந்த அணையும் ஒரு பாத்திரமாகவே வருகிறது இந்தப் படத்தில். படப்பிடிப்பின்போது அந்தப் பகுதி மக்கள் தந்த அபார ஒத்துழைப்பை மறக்க மாட்டேன்.
ஒரு இயக்குநராக உங்கள் அனுபவம் எப்படி?
எனக்கு திரை இயக்கம் புதிதில்லை. இயக்கம் – சுரேஷ் காமாட்சி என போட்டுக் கொள்வது வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். என் திரைப் பயணம் சினிமா இயக்கத்துடன் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. படத்தின் கதை வசனத்தை ஜெகன் எழுதியுள்ளார் (புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை இயக்குநர்).
திரைக்கதை எழுதி இயக்கியுள்ளேன். நல்ல ஆர்டிஸ்டுகள் அமைந்துவிட்டார்கள். ஸ்ரீஜாவுக்கு இந்தப் படம் வேறு ஒரு தளத்தை உருவாக்கித் தரும் என நம்பலாம். வழக்கு எண் முத்துராமன், ஈ ராமதாஸ், லிங்கா, அரவிந்த் என எல்லோருமே பிரமாதமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். என் வேலையைச் சுலபமாக்கியிருக்கிறார்கள்.
முதல் படமே ஹீரோயினை மையப்படுத்தி உருவாக்கியது ஏன்?
பெண்களை மையப்படுத்தி என்பதை தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. நம்மை இயக்கும் அச்சே பெண்தான். அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகும்கூட, அவர்களுக்கு எதிரான சீண்டல்கள், தொல்லைகள் ஓய்வதில்லை. அதை என் முதல் படத்திலேயே சொல்ல முயற்சித்திருப்பது பெருமைக்குரிய ஒன்றுதானே…
நீங்க எப்போ ஹீரோவாக களமிறங்கப் போறீங்க…?
அது அமைகிற வாய்ப்புகளைப் பொறுத்தது!
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பரபரப்பு… நடிகர் சங்க பஞ்சாயத்து என ஒன்றையும் விட்டு வைக்க மாட்டேன் என்கிறீர்கள்.. இயக்க எப்படி நேரம் கிடைத்தது?
நானாக வலிந்து போய் எந்தப் பிரச்சினையையும் இழுப்பதில்லை. நான் வளர்ந்த, இருக்கிற சூழல் திரைத்துறையில் நடக்கிற கூத்துக்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க விடவில்லை. நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. ஆனால் திரைத்துறையில் சிஸ்டம் சரியாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முயற்சிக்கிறேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது வெறும் பரபரப்பாகத் தெரியும். உள்ளே இருப்பவர்களுக்கு என்னைப் புரியும். அதனால்தான் விஷயமறிந்த அத்தனைப் பேரும் என்னை ஆதரிக்கிறார்கள். இதுவே என் முழு நேர வேலையில்லை. பட இயக்கம், தயாரிப்புதான் பிரதானம். அதனால் நேரம் ஒரு பிரச்சினையில்லை.