full screen background image
Search
Sunday 13 October 2024
  • :
  • :

ரங்கம்மாள் பாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய அபிசரவணன்..!

ரங்கம்மாள் பாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய அபிசரவணன்..!

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் திருமதி ரங்கம்மாள் பாட்டி. வடிவேலுவின் படங்களில் அடிக்கடி இவரை பார்த்திருக்கலாம். இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் ஐநூறு ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி மெரீனா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக செய்தி ஒன்று வெளியானது. ஏற்காட்டில், நடுக்காட்டில் ‘சூரபத்மன்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் அபிசரவணன், இந்த தகவலை கேள்விப்பட்டதும் வருத்தமடைந்தார்.

உடனே சென்னையில் உள்ள நண்பர்களையும் நடிகர்சங்கத்தினரையும் தொடர்புகொண்டு ரங்கம்மாள் பாட்டியுடன் பேசி அவரை ஏற்காட்டில் நடைபெறும் படப்பிடிப்புக்கு அழைத்து வரச்செய்தார் அபிசரவணன். தன்னுடன் ஐந்து நாட்கள் அவரை தங்க வைத்ததுடன் படப்பிடிப்பிலும் அவரை உற்சாகமாக கலந்துகொள்ள செய்தார்.

இந்தநிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து ஊர் திரும்பிய நடிகர் அபிசரவணன் பாட்டியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதைக்கண்டு வருந்திய அபிசரவணன், அந்த வீட்டிற்கு தேவையான கட்டில், பேன், மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக ரங்கம்மாள் பாட்டியிடம் உதவித்தொகையாக பத்தாயிரம் ரூபாயை வழங்கினார்.

மேலும் அவரை நடிகர்சங்கத்துக்கு தனது வண்டியிலேயே அழைத்துச்சென்ற அபிசரவணன், சங்கம் மூலமாக அவருக்கு உதவிகள் கிடைக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுத்துள்ளார். அபிசரவணனின் இந்த அன்பும் கரிசனமும் தன்னை நெகிழ வைத்ததாகவும் அவருடன் இருந்த நாட்களில் தான் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ரங்கம்மாள் பாட்டி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

விவசாயிகளாக இருக்கட்டும், நடிகர்களாக இருக்கட்டும் நலிந்த நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வளர்ந்து வரும் நடிகர் என்கிற நிலையிலும் கூட தம்மால் இயன்ற உதவியை செய்துவரும் அபிசரவணனை தாராளமாக பாராட்டலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *