விநியோகஸ்தர் சங்க தேர்தல்:
ஞானவேல்ராஜா தலைமையில் புதிய அணி :
டிசம்பர் 24 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் சென்னை -காஞ்சிபுரம் – திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தயாரிப்பாளரும் விநியோகதஸ்ருமான ஞானவேல்ராஜா தலைமையில் புதிய அணி போட்டியிடுகிறது.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பில் ஞானவேல் ராஜா பேசியதாவது..
.
கடந்த எட்டு மாத காலத்தில் விஷால் தலைமையிலான நம்ம அணியினர் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட எழுபது சத வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். ஒன்பது ஆண்டு காலமாக வராத சிறிய திரைப்படங்களுக்கான தமிழக அரசு வழங்கும் மானியத் தொகையை உறுப்பினர்களுக்குப் பெற்று தந்திருக்கிறோம். நாங்கள் வெற்றிப்பெற்று வந்த ஐந்தரை மாத காலத்திற்குள் ஒன்பது ஆண்டு காலமாக வராதிருந்த அரசின் மானியத் தொகை அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி பெற்றுக் கொடுத்திருக்கிறோம். அறுபது வயதிற்கு மேற்பட்ட நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் கேட்டுக்கொண்ட படி அன்பு தொகை ( கல்வி மற்றும் உடல் நலம்) 12,500 ரூபாயை கடந்த எட்டு மாதமாக வழங்கிக் கொண்டிருக்கிறோம். அதேப் போல் கருணைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 7,500 ரூபாயை வழங்கி வருகிறோம். இதற்காகவே மாதந்தோறும் 25 இலட்ச ரூபாயிலிருந்து 30 லட்ச ரூபாய் வரை ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இது எளிதான காரியமல்ல. இந்த செயல் எந்த ஒரு அமைப்புகளிலோ அல்லது சங்கங்களிலோ காணப்படாத ஒன்று. இன்சூரன்ஸ் செய்வதையே பல சங்கங்கள் தங்களின் சாதனையாக சொல்லிக் கொண்டிருக்கின்றன. அதே போல் தமிழ்நாடு முழுவதும் கேபிள் ஆபரேட்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் மூலம் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் பணிகள் கிட்டத்தட்ட எண்பது சதம் நிறைவேறியிருக்கிறது. மேலும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ட்ரஸ்ட் ஒன்றை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். இப்போது வருவாய் மெல்ல மெல்ல வரத்தொடங்கியிருக்கிறது.
இது போன்று தயாரிப்பாளர் சங்கம் ஆரோக்கியமான பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் போது, ஏதோ ஒரு காரணத்தினால் எட்டு பேர் ஏன் அப்படியொரு முடிவு எடுத்தார்கள் என்று தெரியாமல், உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவது மனதிற்கு வருத்தமளிக்கிறது. ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலும், செயலாளரான நானும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தோம். இந்நிலையில் அவர்கள் சங்க அலுவலகத்திற்கு வந்த போது, பொருளாளர் பிரபுவும், கதிரேசன் அவர்களும் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது, அவர்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கக்கூடியதாக இருந்தது. அவர்களின் தேவை என்னவென்று தெரியாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த எட்டு மாதங்களில் பல நல்ல விசயங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை பாராட்டாமல், அனுபவிக்காமல் ஏனைய சிறிய தயாரிப்பாளர்களும், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கும் பாதிப்பு எற்படும் வகையில், மொத்தம் உள்ள 1200 உறுப்பினர்களில் எட்டு முதல் பத்து உறுப்பினர்கள் மட்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களை ஒரு சிறிய கூட்டம் பின்னணியில் இருந்து தூண்டிவிடுகிறது. இவர்களுக்கு மீண்டும் மீண்டும் தேர்தல் நடைபெறவேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியிருக்கிறது. இது எனக்கு வருத்தமளிக்கிறது.
இன்னும் நான்கு நாட்களில் பொதுக்குழு கூடவிருக்கிறது. அனைவரும் பொதுக்குழுவை கூட்டச் சொல்லித்தான் கேட்பார்கள். ஆனால் இவர்கள் பொதுக்குழு கூட நான்கு நாட்கள் இருக்கும் போது இப்படி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது அவசியமற்ற ஒரு நடவடிக்கை. எந்த தயாரிப்பாளருக்கு என்ன குறையிருந்தாலும் அதைச் சொல்லக்கூடிய சூழல் இருக்கும் போது,இவர்கள் இப்படி போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தவறானது.
இந்நிலையில் நான் ஏன் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தேன் என்பது குறித்து விளக்கம் அளிக்கிறேன். நண்பர் அசோக்குமார் அவர்களின் தற்கொலை பொதுமக்களையே புரட்டிப்போட்ட ஒரு விசயம். அவருடன் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நெருங்கி பழகியிருக்கிறோம். அவர் ஒரு மென்மையான மனிதர். அவர் இப்படியொரு முடிவு எடுப்பதற்கு ஏதோ ஒரு சில காரணங்கள், நிர்பந்தங்கள் நடைபெற்றிருக்கிறது. அதனை தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான காரணம் என்னவாகயிருக்கும்? என்று எண்ணிய போது, ஒரு சிலர் அதாவது மூன்று அல்லது நான்கு நபர்களின் கையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஒரு மாஃபியா போல் மாட்டிக் கொண்டிருக்கிறது. யார் படமெடுக்கவேண்டும்? யாருக்கு விற்பனை செய்யவேண்டும்? என்ன விலைக்கு விற்கவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளை, ஐந்து கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்து, அதன் மூலம் ஐந்து கோடி ரூபாயை நஷ்டப்படுத்தி, ஐந்து கோடி ரூபாயையும் அவர்களிடமே வரும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த தெரிந்த வித்தைக்காரர்கள். முன்னணி நட்சத்திரம் நடிக்கும் படமாக இருந்தாலும் சரி, புதுமுக நடிகர்களின் படமாக இருந்தாலும் அவர்கள் விரும்பினால், அதற்கு ஒரு பிரச்சினையை உருவாக்கி, புகார் தர வைத்து, அதற்கு பஞ்சாயத்து செய்து, தயாரிப்பாளரையும், விநியோகஸ்தரையும் அசிங்கப்படுத்தி, அவர்களின் மனதைக் காயப்படுத்தி, புதிய விநியோகஸ்தர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரிந்துகொள்வதற்குள், அவர்களின் படத்தால் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து சிரமத்திற்கு ஆளாக்கிவிடுகிறார்கள்.
இந்த சூழலில், நான் இதுவரை பதினெட்டு படங்களை தயாரித்திருக்கிறேன். பாகுபலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கும்கி போன்று இருபத்தெட்டு படங்களை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்திருக்கிறேன். இதனால் ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்படும் சோதனையும், வேதனையும் தெரியும். ஒரு விநியோகஸ்தருக்கு ஏற்படும் சோகங்களும், இழப்புகளும், வலிகளும் தெரியும். விநியோகஸ்தர் சங்கம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு , அங்கு விநியோகஸ்தர்களின் பிரச்சினையைப் பற்றி பேசாமல், ஒரிருவர் பலன் பெறவேண்டும் என்பதற்காக அந்த சங்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். நல்லவர்கள் மட்டுமே இடம்பெறவேண்டும் என்று நான் விரும்பும் ஃபெடரேசனிலும் இவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அங்கு செயல்படும் ஒரு சில புல்லுருவிகளின் சுயநலப்போக்கு தடுக்கப்பட்டு, சுதந்திரமாக வியாபாரம் செய்பவர்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியமைக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன். இதன் காரணத்திற்காகவும், விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர்கள் நலத்திற்காகவும், அசோக்குமார் எடுத்தது போன்ற துயரமான முடிவை ஒருவர் மீண்டும் எடுக்காமல் இருப்பதற்காகவும் நான் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றால் வேறு எந்த அமைப்பிலும் எந்தவொரு பதவியிலும் இருக்கக்கூடாது என்ற விதி இருப்பதால், நான் தயாரிப்பாளர் சங்க பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன். இதை தவிர்த்து நான் பதவி விலகுவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன். நேற்று (04 12 2017) தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், அங்கு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இங்கு போட்டியிடுகிறேன். எங்களுடைய விண்ணப்பங்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. டிசம்பர் 24 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறுகிறது.
இந்த அணியில் அனைவரும் புதுமுகங்கள். கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகாலமாக இருந்த பழைய முகங்களுக்கு பதிலாக புது ரத்தம் பாய்ச்சுவது போல் புதிய அணியாக போட்டியிடுகிறோம். நடிகர் சங்க தேர்தலில் எப்படி புதிய அணி வென்று பதவிக்கு வந்ததோ? எப்படி தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய அணி வெற்றிப் பெற்று பதவியேற்றதோ? அதேப்போல் விநியோகஸ்தர் சங்கத்திலும் மாற்றங்கள் உருவாகவேண்டும் என்பதற்காக புதிய அணியாக போட்டியிடுகிறோம். எங்களைத் தவிர்த்து மேலும் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. அவர்கள் இருவரும் அவர்களுக்குள்ளேயே பேசி வைத்து போட்டியிடுவது தான் வரலாறு. இந்த முறை புதியவர்களான எங்களை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். எங்களிடம் புதிய திட்டங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு கஷ்டப்படும் விநியோகஸ்தர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். ஒரு படத்தின் தயாரிப்பாளருக்காவது அப்படத்தின் கதை தெரியும். ஆனால் விநியோகஸ்தர்களுக்கு அது கூட தெரியாமல், படக்குழுவினரை நம்பி முதலீடு செய்கிறார்கள். இதனால் அவர்களில் பெரும்பாலோர் நஷ்டமடைந்து சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் இந்த விநியோகத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு என்னென்ன உதவிகள் செய்ய இயலும் என்பதை திட்டமிட்டிருக்கிறோம்.
இந்நிலையில் நாங்கள் கொடுக்கும் முதல் வாக்குறுதியே பஞ்சாயத்திற்கு வரும் எந்த படத்தையும் நாங்கள் அதாவது சங்க நிர்வாகிகள் விநியோகம் செய்யமாட்டோம். பஞ்சாயத்து தீர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட அந்த விநியோகஸ்தருக்கு நியாயம் கிடைப்பதற்கான பணியை மட்டுமே செய்யவிருக்கிறோம். இந்த வேலையை சரியாக உறுதியாக செய்துவிட்டாலே போதும் அனைத்து விநியோகஸ்தர்களும் நன்றாக இருப்பார்கள். அவர்களின் தொழிலும் லாபகரமாக இயங்கும். இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பிரச்சார கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது. அதில் பல நல திட்டங்களைப் பற்றிய அறிவிப்பு இடம்பெறவிருக்கிறது.
எங்களுடைய அணியில் தலைவர் பதவிக்கு நானும், துணைத்தலைவர் பதவிக்கு கே ராஜன் அவர்களும், துணை செயலாளர் பதவிக்கு ஸ்ரீராம் அவர்களும், செயலாளர் பதவிக்கு நேசமணி அவர்களும், பொருளாளர் பதவிக்கு ‘மெட்டி ஒலி’ சித்திக் அவர்களும் போட்டியிடவிருக்கிறார்கள். இதைத் தவிர வேறு பதவிகளுக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதையும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய மூவர் கூட்டணியை மாற்றியமைத்து திரைதுறையின் வளர்ச்சிக்கு பாடுபடவிருக்கிறோம்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக திரையரங்கு கட்டணம் முறைப்படுத்தபடாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு திரையரங்கு கட்டணத்தை முறைப்படுத்தி அறிவித்திருக்கிறது. இதற்காக தமிழக அரசிற்கும், முதல்வர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இன்று தமிழக அரசு திரையரங்குகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணத்தையும் முறைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதன் படி கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணமாக 20 ரூபாயும், டூவீலருக்கான பார்க்கிங் கட்டணம் 10 ரூபாயாகவும் நிர்ணயித்திருக்கிறது. இதனை மீறி வசூலித்தால் பொதுமக்கள் காவல் நிலையத்திலோ அல்லது ஆட்சியர் அலுவலகத்திலோ புகார் தெரிவிக்கலாம். இதன் மூலம் மக்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவிருக்கும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம்.‘ என்றார்.