எஸ் சினிமா சார்பில் ஆனந்த் பையனூர், வினோத் ஷொர்னூர் தயாரிப்பில் நிவின் பாலி, நடராஜ் சுப்ரமணியம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிச்சி’. கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைத்துள்ளார். டிசம்பர் 8ஆம் தேதி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் பிரமாண்டமாக வெளியிடும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவை ஜிகே ரெட்டி, நிவின் பாலி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், கௌதம் ராமச்சந்திரன், ஆனந்த் பையனூர், லக்ஷ்மி பிரியா ஆகியோர் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தனர்.
விழாவில் “நிவினை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை எல்லோருக்கும் நிவின் பாலியை பிடிக்கும். நிவினை பார்க்கும் போது இளம் வயது மோகன்லாலை பார்ப்பது போல் இருக்கிறது. வழக்கறிஞராக இருந்த கௌதம் இந்த படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் என்றார் நடிகை துளசி.
கடந்த மூன்று வாரங்களாக எனக்கு பல வகைகளிலும் மீடியாக்கள் அளித்து வரும் ஆதரவை தொடர்ந்து அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் நடிகை லக்ஷ்மிபிரியா.
என் கேரியரில் இந்த ரிச்சி படமும், படக்குழுவும் ரொம்பவே ஸ்பெஷல். எனென்றால் 2016 பிப்ரவரியில் நான் கலந்து கொண்ட முதல் தமிழ் ஆடிஷன். அந்த நேரத்தில் தமிழ் அவ்வளவாக எனக்கு தெரியாது. அதன் பிறகு நடித்த ஓரிரு படங்கள் கூட வெளியாகி விட்டன என்றார்
நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
ரிச்சி படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் கௌதம் ராமச்சந்திரனுக்கு நன்றி. பிசாசு படத்தின் கன்னட பதிப்பில் ராதாரவி நடித்த கதாபத்திரத்தில் நடித்திருந்தேன். அதை பார்த்து என்னை நடிக்க சொல்லி கேட்டார். என் மகன் விஷாலிடம் எனக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது, நடிக்கட்டுமா என கேட்டேன். அவனும் எந்த மறுப்பும் சொல்லாமல் நடிக்க ஓகே சொன்னான். நான் இளைஞனாக இருக்கும்போது கூட யாருமே ஆதரவு கொடுக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ள கூட பெரிய தைரியம் வேண்டும். தற்கொலை செய்து கொண்ட அந்த இளம் தயாரிப்பாளர் அஷோக் குமாருக்கு என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அஜனீஷ் ஒரு நல்ல இசையமைப்பாளர். தமிழில் நல்ல இடத்தை பிடிப்பார். நிவின் பாலியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் எனக்கு ஷூட்டிங் இல்லைனாலும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிடுவேன். நான் தமிழ்நாட்டில் தான் 55 வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வேறு மாநிலத்தவர் என்று என்னை சொல்ல விரும்பவில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த மாநிலம் என்றார் தயாரிப்பாளர் ஜிகே ரெட்டி.
நேரம் படத்தில் நிவின் பாலிக்கு ஒரு பாடல் எழுதியிருந்தேன். அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நேரம் படம் வெளியான நேரத்தில் சென்னையில் நீங்க பெரிய இடத்தை அடைவீங்க என சொல்லியிருந்தேன். அது நடந்திருக்கிறது. இந்தியாவின் முகமாகவும் மாறுவார் நிவின் என்றார் பாடலாசிரியர் வேல்முருகன்.
திரைத்துறைக்கு வந்த நாள் முதலே தமிழில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. நேரம் ஒரு பைலிங்குவல் படம், இது தான் என் முதல் நேரடி தமிழ்ப்படம். படத்தில் இசையும், சவுண்ட் மிக்ஸிங்கும் சிறப்பாக வந்திருக்கிறது. சிறந்த நடிகர்கள் மற்றும் இந்த படக்குழுவுடன் வேலை செய்தது மிகச்சிறந்த அனுபவம். என் முதல் படம், உங்கள் ஆதரவு தேவை என்றார் நாயகன் நிவின் பாலி.
நடிகர் முருகதாஸ், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்னாத், தயாரிப்பாளர் ஆனந்த் பையனூர், இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.