full screen background image
Search
Saturday 22 March 2025
  • :
  • :

விஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம்மாண்டாக உருவாகும் ‘ஜுங்கா’

விஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம்மாண்டாக உருவாகும் ‘ஜுங்கா’

‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா ’ வசூலில் மட்டும் வெற்றிப் பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்த தொழிலையே மீட்டெடுத்தது.’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்கு தினமும் போனிலும் நேரிலும் வாழ்த்து சொல்லியபடியே இருக்கிறார்கள். இருப்பினும் வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய கலைப்பயணத்தை அதேயளவிலான ஆர்வத்துடன் தொடர்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை ’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. அதனை , ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

இதனையறிந்ததும் இயக்குநர் கோகுலைத் தொடர்பு கொண்டு படத்தைப் பற்றி கேட்ட போது,‘ இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவிற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி அவர்கள் என்னிடம் கூறியிருந்தார். நான் அப்போது பொருத்தமான கதை உருவானவுடன் நானே வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். அவருக்கு ஏற்ற வகையில் ‘ஜுங்கா’ கதை தயாரானதும், அவரை சந்தித்து கதையை சொல்லத்தொடங்கினேன். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, இந்த கதையை நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏனெனில் படத்தின் பட்ஜெட் தோராயமாக இருபது கோடியை தாண்டும். அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் படம்.அதனால் வேறு தயாரிப்பாளரைக் காட்டிலும் நாமே தயாரிப்பது தான் பொருத்தமானது என்று கூறி அவரே தயாரிக்கிறார்.

அறுபது சதவீத படம் பிரான்சிலும், மீதமுள்ள படம் சென்னை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் ஒப்பந்தமாகியிருக்கிறார். அத்துடன் முக்கியமான கேரக்டரில் யோகி பாபுவும் நடிக்கிறார். ‘ஆண்டவன் கட்டளை’ என்ற படத்திற்கு பிறகு யோகி பாபு, இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் படம் முழுவதும் வரும் வகையில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். ஏனைய தொழில்நுட்ப கலைஞர்களைப் பொறுத்தவரை முன்னணி கலைஞர்கள் பலர் பணியாற்றவிருக்கிறார்கள். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் தெரிவிக்கிறேன்.

விஜய் சேதுபதியின் மாஸ் எண்டர்டெயினராக இப்படம் இருக்கும். காமெடி ஆக்ஷன் லவ் என கமர்சியல் அம்சங்கள் அனைத்தும் சரியான அளவில் இடம்பெற்று, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகவிருக்கிறது.இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது.’ என்றார் இயக்குநர் கோகுல்.

இவர் ரௌத்ரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *