‘பராசக்தி’ திரைப்பட ரேட்டிங்: 4/5
தயாரிப்பு: டான் பிக்சர்ஸ்
இயக்கம் : சுதா கொங்கரா
நடிப்பு : சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா
ஒளிப்பதிவு : ரவி கே சந்திரன்
இசை : ஜி.வி.பிரகாஷ்
வெளியான தேதி : ஜனவரி 10, 2026
நேரம் : 2 மணிநேரம் 42 நிமிடம்
சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘பராசக்தி’ படம், இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த மாணவர் கிளர்ச்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கதை 1959-ல் தொடங்கி 60-களில் நடந்த மொழிப் போராட்ட காலத்துக்குள் நம்மை கொண்டு போகிறது. இந்தி மொழியை எதிர்க்கவில்லை, ஆனால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்பதே படத்தின் முக்கிய கருத்து.
மாணவர் தலைவர் செழியன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். மாணவப் பருவத்திலிருந்து ஒரு இயக்கத்தை வழிநடத்தும் தலைவனாக மாறும் அவரது பயணம் நன்றாகக் காட்டப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் ஓவராக இல்லாமல், உணர்ச்சியும் கோபமும் சரியான அளவில் அவர் நடித்திருக்கிறார். இது அவரது முக்கியமான படங்களில் ஒன்றாக நிற்கும்.
அவரின் தம்பியாக சின்னத்துரை வேடத்தில் அதர்வா துடிப்பாக நடித்திருக்கிறார். மொழி மீது உள்ள வெறியும், இளைஞர்களின் வேகமும் அவருடைய நடிப்பில் நன்றாக வெளிப்படுகிறது. அந்த கதாபாத்திரத்தின் முடிவு படத்தின் உணர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு போகிறது.
ஸ்ரீலீலா, தெலுங்கு பெண்ணாக இருந்தாலும், மொழி உரிமையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவாக நிற்பவர். அவரது கதாபாத்திரம் கதைக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. காதல் பகுதி பெரிய தாக்கம் இல்லையென்றாலும், அவருடைய நடிப்பு இயல்பாக இருக்கிறது.
அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாக ரவி மோகன் நடித்துள்ள போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் கொடுங்கோலனாக வருகிறது. அவரை பார்த்தாலே கோபம் வரும் அளவுக்கு அந்த வேடத்தைச் சரியாக செய்திருக்கிறார். ராணா டகுபதி, சேத்தன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட துணை நடிகர்களும் கதைக்கு வலு சேர்க்கிறார்கள்.
படத்தின் வசனங்கள் தான் பெரிய பலம். “யூனிட்டிக்கும் யூனிபார்மிட்டிக்கும் வித்தியாசம் இருக்கு” போன்ற வசனங்கள் நேரடியாக தாக்கம் கொடுக்கின்றன. மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் இல்லை, அது ஒரு அடையாளம் என்பதையும் படம் அழுத்தமாக சொல்கிறது.
ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் அந்த காலகட்டத்தை அழகாக கண் முன் கொண்டு வருகிறார். ரயில் காட்சிகள் வரலாற்று சாட்சியமாகவே படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை போராட்ட காட்சிகளை இன்னும் வலுப்படுத்துகிறது.
ஆனால் படம் முழுக்க சீரான வேகத்தில் செல்லவில்லை. சில காட்சிகள் நன்றாக வேலை செய்தாலும், அவற்றுக்கிடையிலான மாற்றங்கள் திடீரென வரும் மாதிரி தோன்றுகிறது. சில உணர்ச்சி தருணங்கள் இன்னும் ஆழமாக சென்றிருக்கலாம். காதல் பகுதி கதைக்கு பெரிதாக உதவவில்லை என்பதும் ஒரு குறை.
மொத்தத்தில், ‘பராசக்தி’ மொழி உரிமை பற்றி பேசும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான வரலாற்று அரசியல் படம்.












































