‘தி பெட்’ (The Bed) திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : Srikanth, Shrusti Dange, Black Pandi, VJ Pappu, Vikram, Divya, John Vijay, Devi Priya
Directed By : S.Manibharathi
Music By : Tajnoor
Produced By : Aanjaneya Productions & Srinithi Productions – K. Kandhasamy, K. Ganeshan, V. Vijayakumar, V. Logeshwari Vijayakumar
ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் வார இறுதி விடுமுறைக்காக ஊட்டிக்கு செல்கிறார்கள். அவர்களுடன் விலைமாதுவாக இருக்கும் சிருஷ்டி டாங்கேவும் வருகிறார். சிருஷ்டி மீது ஸ்ரீகாந்த் உண்மையான காதல் கொள்ளுகிறார். அதனால், தனது நண்பர்கள் அவளை தவறாக அணுகாமல் பாதுகாக்க முயற்சிக்கிறார். ஆனால் நண்பர்களோ, அவளுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்படுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் சிருஷ்டி டாங்கே திடீரென காணாமல் போகிறார். அடுத்த நாளே நண்பர்கள் குழுவில் ஒருவரும் மாயமாகிவிடுகிறார். இருவரையும் தேடும் முயற்சியில், ஊட்டி முழுவதும் மர்மம், சந்தேகம், திடீர் திருப்பங்கள் என கதை திரில்லர் பாணியில் நகர்கிறது. விலைமாது என்று தெரிந்தும் ஸ்ரீகாந்த் அவளை ஏன் காதலித்தார்? இந்த மாயத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஸ்ரீகாந்த் இந்த படத்தில் பெரிய ஹீரோ இமேஜ் இல்லாத, சாதாரண மனிதராகவே வருகிறார். இருந்தாலும், காதல், குழப்பம், பயம் போன்ற உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்தி, தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். சிருஷ்டி டாங்கே அழகும், அளவான கவர்ச்சியும் கலந்த நடிப்பால் படம் முழுவதும் கவனம் ஈர்க்கிறார். அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்துள்ள பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோர் தங்களுக்கான இடத்தை சரியாக நிரப்பியுள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜான் விஜய், சப்-இன்ஸ்பெக்டராக தேவி பிரியா, நாயகியின் அம்மாவாக திவ்யா ஸ்ரீதர் ஆகியோரும் அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக அம்மா கதாபாத்திரம் கொஞ்சம் வித்தியாசமாக அமைந்துள்ளது.
‘வெத்து வேட்டு’, ‘பரிவர்த்தனை’ படங்களை தொடர்ந்து எஸ். மணிபாரதி இந்த படத்தையும் எழுதி இயக்கியுள்ளார். காதல் கதையும், யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் திரில்லரும் என இரண்டு ஜானர்களையும் ஒரே படத்தில் சமநிலையாக கையாள முயற்சி செய்திருக்கிறார். போலீஸ் விசாரணை பகுதிகளில் கொஞ்சம் வேகம் குறைந்தாலும், கதையை நாகரீகமாகவும் நேர்மையாகவும் சொன்ன விதம் அதை மறக்க வைக்கிறது.
விலைமாதுவை மையமாக வைத்து கதை சொல்லியிருந்தாலும், எந்தவித ஆபாச காட்சிகளும் இல்லாமல், எல்லா காட்சிகளையும் அழகிய முறையில் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
ஒளிப்பதிவாளர் கோகுல், ஊட்டியின் வழக்கமான சுற்றுலா காட்சிகளை தவிர்த்து, காதல் மற்றும் திரில்லர் உணர்வுக்கு ஏற்ற புதிய லொக்கேஷன்களை தேர்வு செய்திருக்கிறார். தாஜ்நூர் இசையில் ஒரே ஒரு பாடல் இருந்தாலும், அது மனதில் நிற்கும் வகையில் அமைந்துள்ளது. பின்னணி இசை படத்தின் பதட்டத்தையும் மர்மத்தையும் நன்றாக தாங்கி செல்கிறது.
மொத்தத்தில்,’தி பெட்’ (The Bed) வித்தியாசமான காதல் கதையையும், அமைதியான சஸ்பென்ஸ் திரில்லரையும் நாகரீகமாக கலந்த ஒரு முறை பார்க்கத்தக்க படம் தான் ‘தி பெட்’.


















