full screen background image
Search
Monday 9 February 2026
  • :
  • :
Latest Update

‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ திரைப்பட விமர்சனம்

‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ திரைப்பட ரேட்டிங்:2.5/5

Casting : Vaibav, Athulya Ravi, Manikanda Rajesh, Livingston, Sihan Husaini, John Vijay, Sunil, Mottai Rajendran

Directed By : Vikram Rajeshwar

Music By : D. Imman

Produced By : BTG Universal – Bobby Balachandran

திருட்டு அல்லது கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்படுகிற நகைச்சுவை திரைப்படங்கள் ‘மதில் மேல் பூனை’ ரகத்தில் சேரும். ‘டைமிங்’ சரியாக இருந்தால் ‘ரைமிங்’கான வசனங்கள் கூடச் சிரிப்பை வரவழைக்கும். கொஞ்சம் தப்பினால் ‘யாரு சாமி இவங்க’ என்று ‘அந்நியன்’ படத்தில் மறைந்த நடிகர் விவேக்கை பார்த்து பிரகாஷ்ராஜ் புலம்புவது போல ரசிகர்கள் ‘ரகளை’ செய்ய நேரிடும். chennai city gangsters movie review june 20

அதில் எந்த வகைப்பாட்டில் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ சேரும் என்ற எதிர்பார்ப்பினை உருவாக்கியிருந்தது அப்படத்தின் ட்ரெய்லர். கிலோ கணக்கில் குறைகளைச் சுமக்கிற ஒரு கும்பல் எப்படி ஒரு பெரும் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பதைச் சொன்னது.

விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் இணைந்து இயக்கியிருக்கும் இப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டன் ராஜேஷ், ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன் உட்படப் பெரும் பட்டாளமே நடித்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் காமெடியில் வெளுத்துக் கட்டுபவர்கள்.

இந்த ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ தரும் திரையனுபவம் மேலே சொன்னவாறு நம்மைப் புலம்ப வைக்கிறதா அல்லது சிரிப்பில் தளும்ப வைக்கிறதா?

ஆளுக்கொரு திசையில்..!
இளம் வயதில் தன்னை போலீசிடம் இருந்து காப்பாற்றிய பாண்டி, பூச்சி மீது பசுபதிக்கு அன்பு அதிகம். அதனால், அவர்கள் என்ன குற்றம் செய்தாலும், அவர்களுக்குத் தண்டனை கிடைத்துவிடாமல் காக்கப் போராடுவது அவரது வழக்கமாகிறது.

பசுபதிக்கு ‘பாஸ்’ ஆக இருக்கிற சலீம், தனது மகனை அவரது மகளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். பசுபதிக்கும் அதில் சம்மதம் தான்.

ஆனால், இந்த விஷயம் பாண்டிக்கு எரிச்சலைத் தருகிறது. காரணம், பசுபதியின் மகள் ஜெனியை அவர் ஒருதலையாக விரும்புவதுதான்.

இந்த நிலையில், இன்சூரன்ஸ் தொகையை மோசடியாகப் பெறுவதற்காகத் தனது வீட்டில் இருந்து நகை, பணம் கொள்ளை போனதாக ஏமாற்றத் திட்டமிடுகிறார் சலீம். ‘உன்னோட ஆட்கள்கிட்ட என்னோட பணத்தைக் கொடுக்கிறேன். அனுப்பிவிடு’ என்று பசுபதியிடம் சொல்கிறார். அவரோ, பாண்டி மற்றும் பூச்சியை அனுப்பி வைக்கிறார்.

சலீமிடம் பணம், நகையை வாங்கி வரும் இருவரும், வழியில் ஒரு பேக்கில் அதனை மாற்றுகின்றனர். அதே போன்றிருக்கும் இன்னொரு பேக்கை குப்பை பொறுக்கும் நபர் ஒருவரிடம் கொடுக்கின்றனர்.

கையில் பெரும் தொகை இருக்கிற நினைப்பில்லாமல் இருவரும் ஒயின்ஷாப் செல்கின்றனர். அங்கு நடக்கிற கலாட்டாவில் தங்களிடம் இருந்த பேக்கை பறி கொடுக்கின்றனர். குப்பை பொறுக்குபவரின் பேக்கை எடுத்து வருகின்றனர்.

உண்மை தெரிந்ததும் அவர்கள் பதறுகின்றனர். ‘காணாம போன பணத்துக்கு ஈடா ஒரு இடத்துல கொள்ளையடிக்கலாமா’ என்று யோசிக்கின்றனர். அப்போது, ‘அதுக்கு நம்ம கைவசம் ஒரு டீம் இருக்கு’ என்கிறார் ஒயின்ஷாப்பில் அவர்கள் சந்தித்த ஒரு நபர்.

அவரது பேச்சை நம்பி, அந்த கும்பலை இருவரும் சந்திக்கின்றனர். உடனடியாக, ஒரு கொள்ளையில் ஈடுபட முடிவு செய்கின்றனர்.

அவர்கள் கொள்ளையடிக்கச் செல்கிற இடம் ஒரு வங்கி. அங்கிருக்கும் லாக்கரில் இருந்து பணம், நகைகளை லவட்டுவது தான் அவர்களது திட்டம்.

திட்டமிட்டவாறு அவர்களால் வங்கி லாக்கரில் இருந்தவற்றைக் கொள்ளையடிக்க முடிந்ததா, இல்லையா என்று சொல்கிறது ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ஸின் மீதி.

மேற்சொன்ன கதையைக் கேட்டதுமே, எந்தளவுக்கு லாஜிக் காப்பாற்றப்படும் என்பது புரிந்து போயிருக்கும்.

ஆளுக்கொரு திசையில் பயணிப்பதாக, இதில் வரும் பாத்திரங்களின் குணாதிசயங்கள் இருக்கின்றன. அதுவே, ’இக்கதையில் சிரிப்புக்கு கியாரண்டி’ என்றெண்ண வைக்கிறது.

குறைந்தபட்சமாக, ஆங்காங்கே சில ‘காமெடி ஒன்லைனர்கள்’ இருந்தாலே ஓரளவுக்குச் சிரிக்க வைத்துவிடலாம் என்கிற பின்னணி இக்கதையில் இருக்கிறது.

அப்படியிருந்தும் படம் பார்க்க வந்த நம்மை ‘இந்தா வாங்கிக்கோ கும்மாங்குத்து’ என்று வீழ்த்துகிறது ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.

எப்படி இருக்கு..?
வைபவ், அதுல்யா, மணிகண்டன் ராஜேஷ், ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், ஜான் விஜய், ராஜேந்திரன், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, மறைந்த ஷிஹான் ஹுசைனி என்று பலர் நடித்திருக்கிற படம் இது. ஆனாலும், ‘இந்த படத்துல யாருக்கும் முக்கியத்துவம் கிடையாது’ என்பதாக அமைந்திருக்கிறது திரைக்கதை ட்ரீட்மெண்ட்.

திரைக்கதைக்கான ஒழுங்கு என்றில்லை, ஒரு காட்சிக்கான தொடக்கம், முடிவு, அது கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிற விதம் என்று எதுவுமே இப்படத்தில் சரிவரக் கையாளப்படவில்லை. சுருக்கமாகச் சொன்னால், ஒரு காட்சி கூட ஈர்ப்பைத் தருகிற விதத்தில் இல்லை.

இதனால் திறமையான நடிப்பு பட்டாளம் இருந்தும், நகைச்சுவைக்குத் தோதான களம் அமைந்தும், சிரிக்க விடாமல் நம்மை நோகடிக்கிறது ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.

தொடக்கத்திலேயே அது தெளிவாகிவிடுவதால் ஒளிப்பதிவாளர் டிஜோ டோமி, படத்தொகுப்பாளர் சுரேஷ் பிரசாத், கலை இயக்குனர் அருண் சங்கர் துரை உட்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரது உழைப்பு அனைத்தும் நம் கண்களில் படவே இல்லை.

பின்னணி இசை மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களுக்கு ‘பெப்’ ஏற்ற முயன்றிருக்கிறார் டி.இமான். ஆனாலும், அவரது முயற்சி பலன் தருவதாக இல்லை.

சுமார் இரண்டு மணி நேரம் பொறுமை காத்து தியேட்டரில் அமர்ந்திருந்தால், மிகச்சில இடங்களில் ‘ஹே..ஹே..’ என்று சிரிக்கிற வகையில் சில வசனங்கள் வந்து போகின்றன. அவையே இப்படத்தில் நமக்குக் கிடைக்கிற சுவாரஸ்யங்கள்..

இத்தனைக்குப் பிறகும் ‘யாரு சாமி இவங்க’ என்று இந்த ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ பார்த்து திகைக்கவில்லை எனில், அவர்களது சகிப்புத்தன்மைக்குத் தலை வணங்கத்தான் வேண்டும்..!

மொத்தத்தில், ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ ஓட்டைக்குள்ள பல ஓட்டைகள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *