full screen background image
Search
Wednesday 9 July 2025
  • :
  • :
Latest Update

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் – ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ஹும்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில், தயாரிப்பாளர்கள் ராஜா, கஸாலி, பத்திரிக்கையாளர்கள் டி எஸ் ஆர் சுபாஷ், செந்தில் வேல், ‘ஜீவா டுடே’ ஜீவ சகாப்தன், ‘ யூ டூ ப்ரூட்டஸ்’ Minor, தொழிலதிபர்கள் அப்பு பாலாஜி, கமல்ஹாசன், டி. சுரேஷ், இணை தயாரிப்பாளர்கள் சித்தர் திருதணிகாசலம், கௌரி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட, வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் பேசுகையில், ” இந்த திரைப்படத்தில், கதாநாயகனும், கதாநாயகியும்’ காதல் கோட்டை’ படத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் காதலிப்பார்களே.. அதுபோல் நானும், பாடலாசிரியரும் பணிபுரிந்தோம். பாடலாசிரியர் விவேகா எழுதி கொடுத்த பாடலுக்கு இசையமைத்தேன். இதற்கு கொரோனா காலகட்டத்தில் இப்பணிகள் நடைபெற்றதே காரணம். இந்தப் பாடலுக்கு இசையமைத்த பிறகு படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பிடிக்குமா? என்ற ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த பாடலை தற்போது திரையில் பார்த்தபோது எங்கள் அனைவருக்கும் பிடித்தது. ரசிகர்களுக்கும் பிடித்திருக்கும் என்ன நம்புகிறேன்.

இந்தப் பாடலை உருவாக்குவதற்கு முன் தயாரிப்பாளர் எனக்கு படத்தில் இடம்பெறும் காட்சிகளின் புகைப்படங்களை காண்பித்தார். தற்போது திரையில் காண்பித்த போது மிகவும் அற்புதமாக இருந்தது. இதற்காக உழைத்த இயக்குநருக்கும், இதில் முகத்தை காண்பிக்காமல் நடித்த நாயகன் – நாயகிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மேடையில் திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜிடமிருந்து வாழ்த்து பெற்றதை பாக்கியமாக கருதுகிறேன். ” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ” ஹும் என்பதை எப்படி சொல்வது என எனக்குத் தெரியவில்லை. ஹும் என்பதில் ஏகப்பட்ட மாடுலேஷன் இருக்கிறது. ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாடுலேஷனில் இந்த ஹும் இருக்கலாம். அப்படி ஒரு அழகான டைட்டில். இப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்படத்தின் தயாரிப்பாளரான உமாபதி மற்றும் என் நண்பர் சுபாஷ் ஆகியோரின் பேச்சில் ஏராளமான விசயங்கள் இருக்கும். நான் அவர்களை பேச சொல்லிவிட்டு, அவர்கள் பேசுவதை கேட்பேன். யார் எப்போது சினிமாவில் வருவார்கள் என்று சொல்லமுடியாது. ‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் தயாரிப்பாளர் நஞ்சப்பனுடன் அதுபோன்றதொரு அனுபவம் ஏற்பட்டது. அது வித்தியாசமாகவே இருந்தது. இதுபோன்ற தருணங்களில் என்னுடைய ஆசான் சொன்னது தான் நினைவுக்கு வரும். ‘நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான். அவரிடமிருந்து நீ கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விசயம் இருக்கும்’ என சொல்வார். அதனால்தான் நான் யாரையும் எளிதாக பார்க்க மாட்டேன் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விசயம் இருக்கும்.

இயக்குநர் கிருஷ்ணவேல் யாரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை என்றார் . சரி சுயம்புவாக சிலர் வருவார்கள் என எண்ணினேன்.

சினிமா மாறிவிட்டது. பாடலாசிரியர் விவேகாவிடம் இயக்குநரை பற்றி கேட்டபோது, ‘அவரை நான் இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன்’ என்றார். சினிமா ரொம்ப அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளராக இருக்கும் உமாபதி நிறைய விசய ஞானம் உள்ளவர் . அவர் படத்தை தயாரித்திருக்கிறார் என்றால் அதில் ஏதேனும் விசயம் இருக்கும். அவர் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி இருக்கிறார். அவருடன் ஆரம்ப காலத்தில் பழகிய நண்பரையும் தயாரிப்பாளராக்கியது அவர் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. விரைவில் அவருடைய இலட்சிய கனவான இயக்குநராகவும் ஆக வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இங்கு மேடையில் பேசிய யூ டூ ப்ரூட்டஸ் Minor, அவருக்கு யார் மேல் கோபமோ.. அவருடைய பேச்சில் என்னையும் கோர்த்து விட்டார். ” என்றார்.

கதாநாயகன் கணேஷ் கோபிநாத் பேசுகையில், ” என்னுடைய மானசீக குரு கே. பாக்யராஜ் சார். அவர் இருக்கும் மேடையில் அவருடன் இருந்ததை பெருமிதமாக கருதுகிறேன்.

இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அடுத்த நாளே படப்பிடிப்பு சென்றேன். இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்து. படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

கதாநாயகி ஐஸ்வர்யா பேசுகையில், ” இந்தப் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும் , இயக்குநருக்கும் நன்றி. வித்தியாசமான முயற்சியில்.. அழுத்தமான செய்திகள் இந்த படத்தில் இருக்கிறது. பல தடைகளை கடந்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நானும், நாயகனும் முகத்தை காண்பிக்காமல் நடித்திருந்தாலும்… இந்த படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் எங்களை பாராட்டுவார்கள் என ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். ” என்றார்.

இயக்குநர் கிருஷ்ணவேல் பேசுகையில், ” திரைப்படத் துறைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை. எந்த உதவி இயக்குநரும் எனக்கு நண்பராகவும் இல்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்கு ஏன் தோன்றியது? என்றால்.. அடிப்படையில் நான் ஒரு சர்வைவர்.

கொரோனா காலகட்டத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய மகளை நாயகியாக முன்னிறுத்தி திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என சொன்னார்.‌ அதற்காக ஒரு கதையை எழுதினோம். கதை எழுதிய பிறகு தயாரிப்பாளர் பின்வாங்கி விட்டார். அந்தத் தருணத்தில் தான் யாருடைய முகத்தையும் காண்பிக்காமல் ஒரு படத்தை உருவாக்கலாம் என நினைத்து இப்படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன்.

‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் பாக்கியராஜ் கதாபாத்திரத்திற்கு பெயர் இருக்காது. அதுவும் இந்த திரைப்படத்திற்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அறிஞர் அண்ணாவின் ‘ஓர் இரவு’ எனும் திரைப்படமும் இன்ஸ்பிரேஷன் . கலைஞரின் படங்களும் இன்ஸ்பிரேஷன். பார்த்திபனின் படங்களும் இன்ஸ்பிரேஷன். இப்படியாக ஒரு வித்தியாசமான படத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறேன்.

பெண்களின் பாதுகாப்பு குறித்து.. பெண்கள் எதைக் கண்டு அச்சப்படக்கூடாது என்பது குறித்து.. ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும். இது பல படங்களின் தழுவலாகவும் இருக்கலாம். சாயலாகவும் இருக்கலாம். காப்பி என்று கூட சிலர் சொல்லலாம். ஆனால் கதை புதிது. அதற்கு நான் உத்திரவாதம். இந்த படம் கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன் ” என்றார்.

தயாரிப்பாளர் உமாபதி பேசுகையில், ” எங்களின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி.
பத்திரிக்கை துறையில் புகைப்பட கலைஞராக பணியாற்றத் தொடங்கி அதன் பிறகு பல முன்னணி ஊடகங்களில் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் உண்டு.

2004 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ‘Grand Master of Politics ‘ எனும் புத்தகத்தை எழுதினேன். அதனை அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து ‘பதிவுகள்’ எனும் இரண்டாவது புத்தகத்தை எழுதினேன். அதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.

என்னுடைய நண்பர் கிருஷ்ணவேல் ஒரு படத்தை தயாரித்து நிறைவு செய்திருந்தார். ஆள் இல்லாத படம் என்றார். அதன் பிறகு ஒரு நாள் அந்தப் படத்தை காண்பித்தார். அரை மணி நேரம் கடந்தது தெரியவில்லை. சுவாரசியமாக இருந்தது. இதுவரை யாரும் அது போன்ற முயற்சியை மேற்கொண்டதில்லை. புதிதாக இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது அதன் பிறகு விவாதித்தோம். அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை மீண்டும் தயாரிக்க தொடங்கினோம். நண்பர்களின் உதவியுடன் இப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். ” என்றார்.

தயாரிப்பாளர் கஸாலி பேசுகையில், ,” இந்த திரைப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இருக்கும். இந்த திரைப்படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

பாடலாசிரியர் விவேகா பேசுகையில், ” மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் உமாபதி முன்னணி செய்தி நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். கம்போடியா நாட்டில் நடைபெற்ற உலக தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். அந்த தருணத்தில் இருந்து தயாரிப்பாளர் உமாபதியுடன் நெருக்கமாக பழகத் தொடங்கினேன். அவர் தயாரிப்பாளர் மட்டுமல்ல அவரிடம் ஏராளமான கதைகளும் உள்ளது. விரைவில் அவர் இயக்குநராகவும் மாறுவார். அதற்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக படங்களில் சில படங்கள் வித்தியாசமாக இருக்கும். நண்பர் சந்திர மௌலி ஹிட்ச்காக்கின் நாற்பது திரைப்படங்களையும் பார்த்து, அவரைப் பற்றிய ஒரு ஆவண படத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார். அவரோடு இணைந்து நானும் அந்த நாற்பது திரைப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு படத்திலும் அவர் ஒவ்வொரு புதுமையை செய்திருப்பார். அதில் ‘ரோப்’ என்று ஒரு படம். அதில் 11 ஷாட்ஸ்கள் மட்டும்தான் இருக்கும்.

அப்படி ஒரு வித்தியாசமான படமாக நான் இந்த திரைப்படத்தை பார்க்கிறேன். இந்தப் படத்தில் 13 கதாபாத்திரங்கள். 13 குரல்கள். 13 உடல்கள் நடித்திருக்கின்றன. 13 உணர்ச்சிகள் நடித்திருக்கின்றன. ஆனால் அவர்களது முகங்கள் மட்டும் வெளியில் தெரியாது. இதுதான் இப்படத்தின் வித்தியாசம். இதுதான் இப்படத்தில் முகவரி என்று நினைக்கிறேன். இந்தப் படத்தின் முகவரியே முகம் இல்லை என்பதுதான்.
இது ஒரு புது முயற்சி.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் உமாபதி இப்படத்திற்காக கடுமையாக உழைத்தது நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

கொரோனா காலகட்டத்தின் போது நாம் முற்றாக நவீன உலகத்திற்கு மாறிவிட்டோம். இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம்.. நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது. நேர விரயத்தை தவிர்க்க முடிகிறது. தொழில்நுட்பம் இல்லாமல் இன்று நம்மால் வாழவே இயலாது.

இந்த உலகத்தில் விமர்சிக்கப்பட வேண்டும் அல்லது விமர்சிக்க வேண்டும். விமர்சனம் இல்லாமல் வாழவே இயலாது. ‘நீ விமர்சிக்கப்படக்கூடாது என நினைத்தால் நீ எதையும் பேசாதே.. எதையும் செய்யாதே.. எதுவாகவும் உருவாகாதே’ என தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் குறிப்பிட்டதை போல்..
நீ எதுவும் பேசவில்லை என்றால்.. நீ எதுவும் செய்யவில்லை என்றால்… எதுவாகவும் உருவாகவில்லை என்றால்.. உன்னை எவனும் கண்டுகொள்ள மாட்டான். உன்னை எவனும் கவனிக்க மாட்டான். எனவே விமர்சிக்கப்படுவது ஒரு அங்கீகாரம். ஒவ்வொரு விமர்சனங்களிலும் அழகும், அறிவும் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்தப் படத்தில் இயக்குநரின் உழைப்பை விட தயாரிப்பாளர் உமாபதியின் உழைப்பு அதிகம். இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன். ” என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *