full screen background image
Search
Saturday 25 January 2025
  • :
  • :

‘டபுள் டக்கர்’ திரைப்பட விமர்சனம்

‘டபுள் டக்கர்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : Dheeraj, Smurthi Venkat, Kovai Sarala, MS Bhaskar, Mansoor Alikhan, Yashika Anand, Karunakaran, Munishkanth, Kali Venkat

Directed By : Meera Mahadhi

Music By : Vidya Sagar

Produced By : Air flick

ஃபேண்டஸி ஜானரில் இன்னொரு காமெடி படம்.. டக்கரா இருக்கா டபுள் டக்கர்? முகத்தில் காயத்தழும்புடன் இருக்கும் பணக்கார அரவிந்துக்கு (தீரஜ்), தாழ்வு மனப்பான்மை. அவர், பாருவை (ஸ்மிருதி வெங்கட்) காதலிக்கிறார். தனது காதலை அவர் ஏற்கவில்லை என நினைக்கும் அரவிந்த், தற்கொலைக்கு முயல, கடவுளின் உலகத்தில் இருந்து வரும் ரைட், லெஃப்ட் என்ற அனிமேஷன் கதாபாத்திரங்கள், ஆயுள் முடிந்துவிட்டதாகக் கருதி தவறாக அவர் உயிரை எடுத்துவிடுகின்றன. அவர் சடலமும் மாயமாகிறது. அதனால், அரவிந்தின் உயிரை, அவரைப் போலவே இருக்கும் ராஜா (தீரஜ்) என்பவரின் உடலுக்குள் அனுப்பி வைக்கின்றனர் ரைட்டும், லெஃப்ட்டும். இதற்கிடையே தொலைந்த அரவிந்தின் உடலை தேடுகின்றனர். அது கிடைத்ததா? அரவிந்த்- பாரு காதல் என்னவானது என்பது படம்.

மெயின் கதை இதுவாக இருந்தாலும் இதற்குள் மன்சூர் அலிகான் கோஷ்டி, சுனில் ரெட்டி–ஷா ரா, கோவை சரளா- போலீஸ், கருணாகரன்–யாஷிகா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர் டீம், முனீஷ்காந்த்- காளி வெங்கட் குரல்களில் வரும் லெஃப்ட், ரைட் என பல கிளைக் கதைகளைத் திணித்து கலாட்டாவான காமெடி படம் தர முயன்றிருக்கிறார், அறிமுக இயக்குநர் மீரா மஹதி. அதுவே படத்துக்கு பலமாகவும் பலவீனமாகவும் ஆகிவிடுகிறது.

‘இந்தப் படத்துல இன்னுமா லாஜிக் பார்க்கிறீங்க?’ என்று அவர்களே கேட்டுவிடுவதால், காமெடியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கவலையில்லாமல் களமிறங்கி இருக்கிறார்கள். அதற்கேற்ப படத்திலும் திரும்பிய பக்கமெல்லாம் காமெடி தலைகள். இதில் சுனிலும் ஷாராவும் வரும் இடங்கள், எம்.எஸ்.பாஸ்கரிடம் சிக்கிக்கொண்டு சுனில் படும் அவஸ்தை, ‘நான் ராயர் பேசுறேன்’ என்று கோவை சரளாவிடம் மன்சூர் அலிகான் போலவே பேசி மாட்டிக் கொள்ளும் சிலர், எப்போதும் ஃபோன் பேசிக்கொண்டே அலையும் மன்சூர் டீமின் அடியாள் என சில இடங்கள் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன.

தனது நிலையை நினைத்து தவிக்கும் காமெடி இடங்களில் ஸ்கோர் செய்யும் தீரஜ், காதல் மற்றும் டூயட் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். ஸ்மிருதி வெங்கட்டுக்கு அதிக வேலையில்லை. மன்சூர் அலிகான் உட்பட துணை கதாபாத்திரங்கள் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

காமெடி கதைக்குத் தேவையான ஒளிப்பதிவை கச்சிதமாகத்தந்திருக்கிறது கவுதம் ராஜேந்திரனின் கேமரா. வித்யாசாகரின் பின்னணி இசை கதையோடு ஒன்ற வைக்கிறது. அனிமேஷன் விஷயங்களை அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள். கதையை முன்னும் பின்னுமாகச் சொல்லும் திரைக்கதை ரசிக்க வைத்தாலும் குழப்பத்தையே அதிகம் தருகிறது. அதில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் டக்கராக மாறியிருக்கும் இந்த டபுள்டக்கர்!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *