full screen background image
Search
Tuesday 1 September 2026
  • :
  • :
Latest Update

70-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்பு… பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘குறும்பட விருதுகள் 2026’ விழா!

70-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்பு… பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘குறும்பட விருதுகள் 2026’ விழா!

திரைப்படத் துறையில் புதிய திறமையாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கில் Film Development Organisation (FilmDO – NGO) மற்றும் RMK Group of Company இணைந்து நடத்தும் ‘குறும்பட விருதுகள் 2026’ விருது விழா அறிமுகம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த விருது அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, தயாரிப்பாளர் சி.வி. குமார், இயக்குநர் பேரரசு, எழுத்தாளர் லியாகத் அலி கான் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வினில் கஸாலி பேசியதாவது..

“குறும்பட விருதுகள் 2026 என்பது மிகவும் சிறப்பான முயற்சி. குறிப்பாக எதிர்காலத்தில் சினிமா துறைக்கு

இயக்குநர்களாக வர வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பலருக்கு, எப்படி பயணத்தைத் தொடங்குவது, எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற தயக்கமும் குழப்பமும் இருக்கும். அவர்களுக்கு ஒரு சிறிய வழிகாட்டியாகவும், அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வாய்ப்பாகவும் இந்த நிகழ்ச்சி அமையும். இந்த விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தவுடன் முதலில் நினைவுக்கு வந்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள். அழைத்தவுடனேயே உற்சாகமாக வருவதாக ஒப்புக்கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார். அதேபோல் எழுத்தாளர் லியாகத் அலி கான், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சி.வி.குமார், வசனகர்த்தா விஜி உள்ளிட்ட திரையுலகின் பல முக்கிய பிரபலங்களும் இந்த புதிய தலைமுறை கலைஞர்களை ஊக்குவிக்க உடனடியாக சம்மதித்தனர். இயக்குநர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் என அனைவரும் இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக தங்களது உணர்வையும் உழைப்பையும் ஒன்றாகச் சேர்த்து குறும்படங்களை உருவாக்கி, மிகுந்த எதிர்பார்ப்புடன் அனுப்பியுள்ள நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் மனதார வரவேற்கிறோம். உங்கள் அனைவரின் ஆதரவோடு இந்த முயற்சி எதிர்காலத்தில் முழுநீள திரைப்படங்கள் தயாரிக்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது…

“இது மிகவும் மகிழ்ச்சியான நாள். கஸாலி எப்போது என்னை அணுகினாலும் திரையுலகின் நலனுக்காகவும், புதிய திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவுமே பேசுவார். அதனால் அவரது எந்த முயற்சிக்கும் என்னுடைய ஆதரவு இருக்கும்.

குறும்படங்களை உருவாக்கி அனுப்பியுள்ள இளம் படைப்பாளிகள் அனைவரும் நாளைய திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள். நல்ல கதைகளை உருவாக்கும் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். உங்களைப் பாதிக்கும் நல்ல கதை இருந்தால் என்னிடம் கொண்டு வாருங்கள், அதை திரைப்படமாக உருவாக்க என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்.

புதிய இயக்குநர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் இந்த ‘குறும்பட விருதுகள் 2026’ முயற்சி வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.

திரை எழுத்தாளர் லியாகத் அலிகான் பேசியதாவது…

“இந்த சிறப்பான விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த விழாவுக்கு காரணமாக இருக்கும் கஸாலி அவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், சினிமா துறையின் நலனுக்காக தொடர்ந்து சிந்தித்து, பேசிக்கொண்டிருப்பவர். நல்ல விஷயங்களை யாராவது கேட்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்லக்கூடியவர்.

ஒருவர் உயரத்துக்கு செல்ல அவரது தனிப்பட்ட திறமை மட்டும் போதாது; அவருடன் பயணிக்கும் நல்ல மனிதர்களின் ஆதரவும் முக்கியம். அதற்கு சிறந்த உதாரணம் கலைப்புலி எஸ். தாணு அவர்கள். பல திறமையாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்தவர். விஜயகாந்த் அவர்களின் வளர்ச்சியிலும் அவரது பங்கு முக்கியமானது. புதியவர்களை ஊக்குவிப்பதிலும், நல்லது இல்லையென்றால் அதை நேரடியாகச் சொல்லி வழிகாட்டுவதிலும் அவர் தனித்துவமானவர்.

இந்த விழாவுக்காக தேர்வு செய்யப்பட்ட குறும்படங்களில் பல நல்ல சமூக கருத்துகள் இடம்பெற்றுள்ளன. குடும்ப உறவுகள், பெண்களின் உரிமை, சமூகப் பொறுப்பு, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற முக்கியமான விஷயங்களை படைப்பாளிகள் அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற படைப்புகள் மக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

இந்த குறும்படங்களை உருவாக்கிய இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகப் பாடுபட்ட மாரி பாண்டியரைப் பாராட்டுகிறேன்,” என்றார்.

இயக்குநர் மஜீத் பேசியதாவது…

“கஸாலி சார் வெளியில் சாதாரணமாகத் தோன்றினாலும், அவருக்குள் சினிமா குறித்து ஏராளமான சிந்தனைகளும், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது. குறும்படக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த முயற்சி நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும்.

வெற்றி பெற்றவர்களை மட்டும் நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம். ஜெயித்தவன் வெற்றியாளர்; தோற்றவன் சாதனையாளர். எனவே, வாய்ப்பு கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இன்றைய காலத்தில் சினிமாவுக்கு வருபவர்களுக்கு இதுபோன்ற தளங்கள் மிகப்பெரிய வாய்ப்பாக அமைகின்றன.

நான் பார்த்த குறும்படங்களில், தற்கொலை ஒரு தீர்வல்ல; மனதில் உள்ள பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஒரு படம் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது. ஒருவரின் தற்கொலை அவரைச் சுற்றியுள்ள பலரையும் பாதிக்கிறது என்பதை படைப்பாளிகள் உணர்வுபூர்வமாகக் கூறியிருந்தனர்.

அதேபோல், அதிவேக பைக் பயணத்தால் ஏற்படும் விபத்துகள் மற்றும் குடும்பங்கள் சந்திக்கும் பாதிப்புகள், போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் போன்ற சமூகப் பிரச்சினைகளையும் குறும்படங்கள் எடுத்துரைத்திருந்தன.

இதுபோன்ற சமூக விழிப்புணர்வு படைப்புகளுடன், இளைஞர்களுக்கு நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் கொடுத்து, சாதிக்கத் தூண்டும் நேர்மறையான கருத்துகளை மையமாகக் கொண்ட குறும்படங்களும் அதிகம் வர வேண்டும். சமூக அநீதிகளை கேள்வி கேட்கும் படைப்புகளும் உருவாக வேண்டும்.

இந்த விழாவில் பங்கேற்றுள்ள அனைத்து இளம் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் எதிர்காலத்தில் பெரிய சாதனையாளர்களாக உயர வேண்டும். இந்த சிறப்பான நிகழ்ச்சியை நடத்தி வரும் கஸாலி சாருக்கும், மாரி பாண்டியர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் விஜி பேசியதாவது…

“குறும்படம் என்பது சினிமாவின் குட்டி வடிவம் அல்ல. ஒரு பிரமாண்டமான கதையை சுருக்கமாகவும், தெளிவாகவும், தாக்கம் ஏற்படுத்தும் வகையிலும் சொல்வதுதான் குறும்படம். ஒரு விஷயத்தை எந்த அளவுக்கு நேர்த்தியாகவும் குறைந்த நேரத்திலும் சொல்லி முடிக்கிறோமோ, அதுவே சிறந்த படைப்பாக அமையும்.

நான் பார்த்த மூன்று குறும்படங்களும் சமூகத்தில் நடைபெறும் முக்கியமான பிரச்சினைகளைப் பேசியிருந்தன. குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை ஒரு படம் சிந்திக்க வைக்கும் வகையில் பதிவு செய்திருந்தது. அதேபோல், இளைஞர்கள் பைக் வீலிங் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அப்பாவி குடும்பங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை மற்றொரு குறும்படம் எச்சரிக்கையாகக் கூறியிருந்தது.

மற்றொரு குறும்படம், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மனம் திறந்து பேசுவதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தது. குறும்படத்திற்கு நேரம் குறைவாக இருக்கலாம்; ஆனால் அதற்குள் தெளிவான நோக்கமும் இலக்கும் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கருத்தை ரசிகர்களின் மனதில் அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டும்.

நான் பார்த்த இந்த மூன்று படங்களிலும் நடித்திருந்த கலைஞர்கள் சிறப்பாக தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர். இன்னும் பல குறும்படங்களை பார்க்க வேண்டியுள்ளது. எதைப் பற்றிப் பேசினாலும், மக்களை சிந்திக்க வைக்கும் ஒரு படைப்பு உருவாவது பாராட்டுக்குரிய விஷயம். இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து குறும்பட படைப்பாளிகளுக்கும், இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ள குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…

“குறும்படம் என்பது சிறிய படமல்ல; அதில் ஒரு பெரிய திரைப்படத்திற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஒரு கதையை சுருக்கமாகவும், தெளிவாகவும், தாக்கம் ஏற்படுத்தும் வகையிலும் சொல்வதுதான் குறும்படத்தின் மிகப்பெரிய பலம். இன்றைய இளம் படைப்பாளிகளுக்கு தங்களது திறமையை நிரூபிக்க குறும்படம் ஒரு சிறந்த தளமாக உள்ளது.

நான் பார்த்த குறும்படங்களில் பெரும்பாலானவை மக்களுக்கு நல்ல விஷயங்களையும், சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் கருத்துகளைக் கொண்டிருந்தன. தற்கொலை என்பது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வல்ல என்பதை ஒரு குறும்படம் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது. சிறிய பிரச்சினைகளுக்காக உயிரை மாய்த்துக் கொள்வதை விட, அதைப் பற்றி மற்றவர்களிடம் பேசி தீர்வு காண வேண்டும் என்ற கருத்து மிகவும் அவசியமானது.

அதேபோல், பைக் விபத்துகள் போன்ற சம்பவங்களுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழும்போது, பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. பிள்ளைகளின் ஆசைக்காக அனைத்தையும் வாங்கிக் கொடுப்பதோடு நின்றுவிடாமல், அவர்களை சரியான முறையில் வளர்த்து வழிகாட்ட வேண்டும்.

இன்று பெரிய திரைப்படங்களில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு நல்ல கருத்துகளையும் சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் குறும்படங்கள் ஒரு ஆறுதலாக இருக்கின்றன. நீங்கள் பெரிய திரைக்கு வரும்போதும் இதேபோன்ற நல்ல கருத்துகளையும், சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வையும் உங்கள் படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும். ஆயுதங்களைத் தூக்குவதை விட நல்ல சிந்தனைகளைத் தூக்கிச் செல்லுங்கள். அதுதான் ஒரு படைப்பாளியின் உண்மையான வெற்றி,” என்றார்.

மாரி பாண்டியர் பேசியதாவது…

“பெரிய திரைப்படங்கள் பெரும் காவியங்கள் என்றால், குறும்படங்கள் திருக்குறளைப் போன்றவை. குறைந்த நேரத்தில் மிகப்பெரிய கருத்தை அழுத்தமாகச் சொல்ல முடியும். நான் பார்த்த மூன்று குறும்படங்களும் அந்த வகையில் சிறப்பாக இருந்தன.

குறிப்பாக முருகதாஸ் நடித்த குறும்படம் என்னை மிகவும் கவர்ந்தது. ஆரம்பம் முதல் இறுதிவரை என்ன நடந்திருக்கிறது என்ற பதற்றத்தையும் ஆர்வத்தையும் பார்வையாளர்களிடம் தொடர்ந்து வைத்திருந்தனர். தற்கொலைக்கு முயற்சிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை, ஒரு தந்தை நேரடியாக விசாரிக்காமல் தனது பேச்சின் மூலம் புரிந்து கொண்டு, இறுதியில் அவளை மனம் திறந்து பேச வைப்பது மிகவும் இயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் அமைந்திருந்தது.

தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு பல நேரங்களில் பேசுவதற்கான ஒரு சூழல் கிடைப்பதில்லை. ஆனால், மனதில் இருக்கும் பிரச்சினைகளை யாரிடமாவது பகிர்ந்து பேசினால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற மிக முக்கியமான கருத்தை இந்த குறும்படம் அழகாக பதிவு செய்துள்ளது.

குறிப்பாக திரைக்கதை, காட்சியமைப்பு மற்றும் எடிட்டிங் மிகவும் நேர்த்தியாக இருந்தது. பெரிய இயக்குநரின் பெயரில் இந்தப் படம் வெளியானிருந்தாலும் ரசிகர்கள் நிச்சயம் பாராட்டியிருப்பார்கள். அந்த அளவுக்கு இந்தப் படைப்பு என்னை கவர்ந்தது,” என்றார்.

இந்த விழாவை கஸாலி மற்றும் மாரி பாண்டியார் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்வில் 70-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்றுள்ளன. புதுமுக இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் திரைப்படத் துறையில் தங்களது திறமையை வெளிப்படுத்த விரும்பும் கலைஞர்களுக்கு சிறந்த தளமாக இந்த விருது விழா அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறும்படத் துறையில் சிறந்து விளங்கும் படைப்பாளர்களை கவுரவிக்கும் வகையில், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சமூக கருத்தை பேசும் குறும்படம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த படத்திற்கு ரூ.25,000, சிறந்த இயக்குநருக்கு ரூ.15,000, சிறந்த நடிகருக்கு ரூ.10,000, சிறந்த சமூக கருத்தை மையமாகக் கொண்ட குறும்படத்திற்கு ரூ.10,000 என மொத்தம் ரூ.60,000 மதிப்பிலான பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.

குறும்படங்களின் வழியாக சமூக கருத்துகள், காதல், நட்பு, குடும்பம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட பல்வேறு கதைகள் திறமையாக சொல்லப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் புதிய படைப்பாளர்களின் முயற்சிகளை ஊக்குவித்து அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் முயற்சியாகவே இந்த ‘குறும்பட விருதுகள் 2026’ விழா நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புதிய திறமையாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, அவர்களின் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும் நோக்கில் நடைபெற்ற இந்த ‘குறும்பட விருதுகள் 2026’ விழா, குறும்பட உலகைச் சேர்ந்த கலைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, பாராட்டைப் பெற்றுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *