‘அருள்வான்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
CAST
Arulnithi – Muthuvel
Aarav – Kanthan
Ramya Pandian – Amaravalli
Baby kritika – Kurunji
John Vijay – Pandian
Kali Venkat – Dhanraj
VTV Ganesh – Chandran
CREW
Director : Ganesh Vinayakan
Cinematographer : M.Sukumar
Music director : G.V. Prakash Kumar
Editor : Lawrence Kishore
Art Director: Lalgudi Ilaiyaraja
PRO: Nikil Murukan
‘அருள்வான்’ பொழுதுபோக்கை மட்டுமே நம்பாமல் சமூக அக்கறையுடன் உருவாகியிருக்கும் ஒரு தரமான திரைப்படம். இன்னும் அடிப்படை கல்வி மற்றும் சாலை போன்ற வசதிகள் கூட கிடைக்காமல் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாக சொல்ல முயற்சித்திருக்கிறது.
மலை கிராமத்தில் வாழும் குறிஞ்சி என்ற சிறுமிக்கு படிக்க வேண்டும் என்பதே வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு. ஆனால் அங்குள்ள சூழல், கல்வி வசதிகள் இல்லாமை, சமூக கட்டுப்பாடுகள் என பல தடைகள் அவளது கனவை தடுக்கின்றன. அந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் முத்துவேல் அவளது வாழ்க்கையில் வருகிறார். குறிஞ்சி மட்டும் அல்லாமல் அந்த மலை கிராமத்தில் இருக்கும் அனைத்து குழந்தைகளும் படிக்க வேண்டும் என்ற அவளது கனவு நிறைவேறுகிறதா என்பதுதான் படத்தின் கதை.
மாவட்ட ஆட்சியராக நடித்துள்ள அருள்நிதி மிகவும் இயல்பாகவும் முதிர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். எந்தவித ஹீரோயிசமும் இல்லாமல் கதைக்கு தேவையான அளவிலேயே தனது கதாபாத்திரத்தை கொண்டு சென்றிருப்பது படத்திற்கு பெரிய பலம். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு அதிகம் கவர்கிறது.
பழங்குடியின இளைஞராக நடித்துள்ள ஆரவ் தனது கதாபாத்திரத்திற்காக உழைத்திருப்பது தெரிகிறது. ரம்யா பாண்டியன் எளிமையான மலைவாழ் பெண்ணாக பொருத்தமாக நடித்திருக்கிறார். காளி வெங்கட், ஜான் விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட அனைவரும் கதைக்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.
இந்த படத்தின் உண்மையான நாயகி சிறுமி கிருத்திகாதான். படிக்க வேண்டும் என்ற ஏக்கம், பெற்றோரை விட்டு பிரியும் வேதனை, பயம், தைரியம், நம்பிக்கை என ஒவ்வொரு உணர்வையும் மிக அழகாக வெளிப்படுத்தி முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார். அவரது நடிப்பு படம் முடிந்த பிறகும் மனதில் நிற்கிறது.
ஒளிப்பதிவாளர் சுகுமார் மலைகளின் இயற்கை அழகை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் அந்த கிராமத்திற்குள் நம்மையும் அழைத்துச் செல்கிறது. ஜி வி பிரகாஷ் குமாரின் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது. லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பும் கதையின் இயல்பான ஓட்டத்திற்கு துணையாக இருக்கிறது.
இயக்குநர் கணேஷ் விநாயகம் எந்த சமரசமும் இல்லாமல் பழங்குடியின மக்களின் வாழ்க்கை, கல்விக்கான போராட்டம், பெண் கல்வியின் அவசியம், அடிப்படை உரிமைகள் போன்றவற்றை மிகவும் நேர்மையாக பதிவு செய்திருக்கிறார். சில இடங்களில் படம் ஆவணப்படம் போல தோன்றினாலும், அது கதையின் உண்மைத்தன்மையை குறைக்கவில்லை. மாறாக சொல்ல வந்த கருத்தை இன்னும் வலிமையாக கொண்டு சேர்க்கிறது.
மொத்தத்தில், ‘அருள்வான்’ வணிக சினிமாவை தாண்டி நல்ல கதையையும் மனதை தொடும் உணர்வுகளையும் விரும்புபவர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.























