‘காட்டாளன்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Cast: Antony Varghese Pepe, Dushara Vijayan, Kabir Duhan Singh, Sunil
Written & Directed by Paul George
Producer: Shareef Muhammed
Music: Ravi Basrur
Banner: Cubes Entertainments
Tamil Distribution: GS Cinemas & RP Bala
கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாரி என்ற கடத்தல்காரன், யானைகளை கொன்று அதன் தந்தங்களை வெளிநாடுகளுக்கு கடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறான். அதோடு அங்கு வாழும் பழங்குடியின மக்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து அடிமைகளைப் போல நடத்துகிறான். மாரியின் இந்த சட்டவிரோத சாம்ராஜ்யத்திற்கு போட்டியாக எடி என்ற மற்றொரு கடத்தல் கும்பல் தலைவன் உருவாக, இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது.
இந்த சூழலில் மாரியின் நம்பிக்கைக்குரிய மனிதராக ஆண்டனி வர்கீஸ் களமிறங்குகிறார். பறிபோன யானை தந்தங்களை மீட்பது முதல் எதிரிகளை சமாளிப்பது வரை அனைத்தையும் வெற்றிகரமாக செய்து மாரியின் வலதுகரமாக மாறுகிறார். ஆனால் காலப்போக்கில் மாரியின் உண்மையான முகத்தையும், பழங்குடியின மக்களுக்கு அவர் செய்யும் கொடுமைகளையும் அறியும் ஆண்டனி, அவருக்கு எதிராக திரும்புகிறார். பின்னர் அந்த மக்களை ஒன்றிணைத்து கடத்தல் கும்பல்களுக்கு எதிராக போராடுகிறார். இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே காட்டாளன் படத்தின் கதை.
ஆண்டனி வர்கீஸ் பெப்பே தனது உடல்மொழி, திரை இருப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் முழு படத்தையும் தாங்கி நிற்கிறார். அதிக வசனங்கள் இல்லாமல் கண்கள் மற்றும் உடல்மொழி மூலமே கதாபாத்திரத்தை கொண்டு சென்றிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது முரட்டுத்தனமான நடிப்பு ரசிகர்களை கவர்கிறது.
மாரியாக நடித்திருக்கும் சுனில் வழக்கம் போல கொடூரமான வில்லனாக மிரட்டியிருக்கிறார். அவரது கதாபாத்திரத்தில் புஷ்பா படத்தின் தாக்கம் தெரிந்தாலும், தனது நடிப்பால் அதை ஈடுகட்ட முயற்சித்துள்ளார். கபீர் துகான் சிங் ஸ்டைலிஷான வில்லனாக அறிமுகமாகினாலும், அவருக்கான முக்கியத்துவம் கதையின் போக்கில் குறைந்து விடுகிறது.
துஷாரா விஜயன் குறைவான காட்சிகளில் வந்தாலும் கவனம் ஈர்க்கிறார். பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டர் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அல்போன்ஸ் புத்திரன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் சிறப்பு தோற்றமும் ரசிகர்களுக்கு ஆச்சரியம் தருகிறது.
படத்தின் மிகப்பெரிய பலம் ரெனாடைவின் ஒளிப்பதிவு. காடுகளின் அழகையும், ஆக்ஷன் காட்சிகளின் வேகத்தையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமும் பிரம்மாண்டமாக தெரிகிறது. சமீர் முகமதுவின் படத்தொகுப்பும் படத்தின் வேகத்தை தக்க வைத்திருக்க உதவுகிறது.
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு மிகப்பெரிய பலம். சில இடங்களில் மாஸ் உணர்வை அதிகரித்தாலும், பல இடங்களில் அதீத சத்தம் காரணமாக சோர்வை ஏற்படுத்துகிறது. கேஜிஎஃப் மற்றும் சலார் படங்களின் இசை தாக்கம் இதில் தெளிவாக தெரிகிறது.
இயக்குநர் பால் ஜார்ஜ் யானை தந்தம் கடத்தல், பழங்குடியின மக்களின் வாழ்க்கை, இயற்கை வளங்களின் சுரண்டல் போன்ற முக்கியமான விஷயங்களை கதைக்களமாக எடுத்திருந்தாலும், அவற்றை ஆழமாக பேசாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். இதனால் கதையில் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களும், வலுவான திரைக்கதையும் குறைவாக இருப்பது தெரிகிறது.
படம் முழுவதும் ஸ்லோ மோஷன் காட்சிகள், மாஸ் பில்டப், அதிரடி சண்டைகள் மற்றும் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஆக்ஷன் ரசிகர்களுக்கு படம் பிடிக்கலாம். ஆனால் வலுவான கதை, உணர்ச்சி மற்றும் புதிய அனுபவத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு சற்று ஏமாற்றம் தரக்கூடும்.
மொத்தத்தில், ‘காட்டாளன்’ திரைக்கதையில் குறைகள் இருந்தாலும், ஆக்ஷன் ரசிகர்களுக்கு ஒரு முறை பார்க்கக்கூடிய விறுவிறுப்பான அனுபவத்தை வழங்குகிறது.


















