‘மேட் இன் கொரியா’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Priyanka Arul Mohan, Park Hye‑jin, No Ho‑jin, Rishikanth, Jang Jaehyeon
Directed By : Ra. Karthik
Music By : Hesham Abdul Wahab
Produced By : Rise East Entertainment – Srinidhi Sagar
‘மேட் இன் கொரியா’ சிறு வயதில் கொரியா மீது ஒரு ஈர்ப்பு கொண்ட செண்பா, ஒருநாள் அந்த நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையோடு வாழ்கிறாள். அந்த வாய்ப்பு கிடைத்ததும் சந்தோஷமாக கிளம்பும் அவளுக்கு அங்கு சென்ற பிறகு எதிர்பாராத பிரச்சனைகள் தான் காத்திருக்கின்றன. காதலனால் ஏமாற்றப்படுவது, வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பது, மொழி தெரியாத சூழலில் தனியாக போராடுவது போன்ற சிக்கல்கள் அவளை முற்றிலும் உடைத்து விடுகின்றன. அந்த நிலையிலிருந்து அவள் மீண்டு வருகிறாளா, தனது வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறாளா என்பதுதான் படத்தின் மையம்.
படத்தின் மிகப்பெரிய பலம் பிரியங்கா மோகன் தான். அவர் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். சிரிப்பு, அழுகை, குழப்பம், பயம் எல்லாவற்றையும் மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார். சில இடங்களில் கதையைக் காட்டிலும் அவரின் நடிப்பு தான் படம் நகர்த்துகிறது என்று சொல்லலாம். குறிப்பாக ஒரு பாட்டியுடன் உருவாகும் உறவு மிகவும் உணர்ச்சிபூர்வமாக அமைந்துள்ளது. அந்த தொடர்பு தான் படத்தில் உண்மையான எமோஷனை தரும் முக்கியமான பகுதி.
ஆனால் படத்தில் இருக்கும் பெரிய குறை என்னவென்றால், அது சொல்லும் உணர்வுகளை முழுமையாக நம்மிடம் கொண்டு வர முடியாதது. செண்பாவுக்கு கொரியா மீது உள்ள காதல் அதிகமாக உணரப்படவில்லை. அவள் அந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற ஆசை, அவள் உள்ளுக்குள் நடக்கும் போராட்டம் ஆகியவை சரியாக ஆழமாக சொல்லப்படவில்லை. அதேபோல், வெளிநாட்டில் தனியாக போராடும் ஒரு பெண்ணின் கதை என்ற கோணம் பல படங்களில் பார்த்த மாதிரி தோன்றுகிறது. சில காட்சிகள் முன்னரே என்ன நடக்கும் என்று யூகிக்க முடிகிறது.
கொரியா பின்னணி இருந்தாலும் அந்த நாட்டின் கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்றவை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. பல இடங்களில் அது ஒரு வெளிப்புற அலங்காரம் மாதிரி தான் தோன்றுகிறது. தமிழ் மற்றும் கொரியா கலாச்சாரத்தை இணைக்க முயற்சி செய்திருக்கிறார்கள், ஆனால் அது சில இடங்களில் இயல்பாக இல்லாமல் செயற்கையாக தோன்றுகிறது. குறிப்பாக பாடல்கள், காட்சிகள் சில நேரங்களில் ஓவராக நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைந்ததால் உண்மைத் தன்மை குறைந்து போகிறது.
படத்தின் திரைக்கதை மெதுவாக நகர்கிறது. முதல் பாதி ஓரளவு ஈர்க்கும், ஆனால் இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் குறைகிறது. சில இடங்களில் தேவையில்லாத சம்பவங்கள் சேர்க்கப்பட்டு கதையை இழுத்து கொண்டுசெல்லும் உணர்வு வருகிறது. உணர்ச்சி காட்சிகள் கூட சில நேரங்களில் ஆழமில்லாமல் தோன்றுகிறது.
இசை மற்றும் ஒளிப்பதிவு நல்ல அளவில் இருக்கிறது. குறிப்பாக கொரியா மற்றும் ஊட்டி பகுதிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சில காட்சிகள் பார்ப்பதற்கு ரசிக்க வைக்கும். ஆனால் படம் உணர்ச்சியில் ஆழம் கொடுக்க வேண்டிய இடங்களில் அது குறைவாக இருப்பது உணரப்படுகிறது.
மொத்தத்தில், ‘மேட் இன் கொரியா’ பிரியங்கா மோகனின் நடிப்பு மற்றும் சில உணர்ச்சிப் பகுதிகள் மட்டும் படத்தை தாங்குகின்றன. லைட்டாக ஒரு முறை பார்க்கலாம், ஆனால் நினைவில் நீண்ட நேரம் நிற்கும் அளவுக்கு தாக்கம் அளிக்காத படம்.



















