full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

தந்தை கண் முன் ரொமான்ஸ் செய்த யாகன் ஹீரோ..!

சண்டைக்காட்சியில் மரணத்தின் வாசலை தொட்டு திரும்பிய யாகன் ஹீரோ..!

அப்பாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு ரொமான்ஸில் தூள்கிளப்பிய யாகன் ஹீரோ..!

தேனி மாவட்ட கிராமங்களில் இரவு நேரம் சுற்றியலைந்த ‘யாகன் ஹீரோ..!

ஹாலிவுட் பாணியை கையாண்டு இயக்குனரை டென்சனாக்கிய அறிமுக ஹீரோ..!

‘மாப்பனார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் தான் ‘யாகன்’.. வினோத் தங்கவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு லண்டன் வாழ் தமிழர் நிரோ பிரபாகர் இசை அமைத்துள்ளார். படத்தின் கதாநாயகனாக டென்மார்க் தமிழரான சஜன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். நாயகியாக அஞ்சனா கீர்த்தி நடிக்க, முனீஸ் ராஜா, தவசி, பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கிராமங்களில் நடைபெறும் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையே ஒருத்தொருத்தர் புரிந்துகொள்ளாமல் மோதுவதும், அந்த மோதலால் ஏற்படும் இழப்பு எத்தகையது என்பதையும் சொல்லும் படைப்பாக உருவாகியுள்ளது இந்த ‘யாகன்’

சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற தனது தீராத ஆர்வம் குறித்தும், ‘யாகன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் படத்தின் நாயகன் சஜன்.

“நினைவு தெரிந்த நாளில் இருந்து எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை பார்த்து பார்த்து, நடிக்கவேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாகவே எனக்குள் வந்துவிட்டது. டென்மார்க்கில் சில குறும்படங்களில் நடித்துள்ளேன்.. தமிழில் நடிகனாக அறிமுகமாக வேண்டும் என இங்கே வந்தபோது வினோத் தங்கவேல் சொன்ன இந்த ‘யாகன்’ கதை என்னை கவர்ந்தது.

இங்கே கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்.. சிறுவயதில் இருந்தே டான்ஸ் கற்றுக்கொண்டதாலும், நிறைய மேடைகளில் நடனமாடி பரிசுகள் பெற்றதாலும் இங்கே பாடல் காட்சிகளில் நடிப்பது எனக்கு சுலபமாக இருந்தது.. நான்கு நாட்கள் திட்டமிட்ட பாடலை இரண்டு நாட்களில் எடுத்து முடிக்க அது உதவியது.

ஆனால் நடனம் எளிதாக வந்ததைப்போல, ரொமான்ஸ் காட்சிகளில் அவ்வளவு எளிதாக என்னால் ஆரம்பத்தில் பொருந்தமுடியவில்லை.. கூச்சமாக இருந்தது… எனது தந்தை கூட முதலில் நான் சிரமப்படுவதை பார்த்து ‘உனக்கு இது புதிது தானே’ என்றார்.. அவர் சினிமாவில் நடிப்பதை சொல்கிறாரா இல்லை ரொமான்ஸ் காட்சியில் நடிப்பதை சொல்கிறாரா என்று எனக்கு கொஞ்சம் குழப்பமாக கூட இருந்தது.

ஆனால் படத்தின் நாயகி அஞ்சனா கீர்த்தி எனது கூச்சத்தை போக்கி நடிப்பதற்கு உதவி செய்தார். தொடர்ந்து வந்த நாட்களில் ரொமான்ஸ் காட்சிகளில் சிறப்பாக நடித்தேன். எந்த அளவுக்கு என்றால் அந்தக்காட்சிகளை படமாக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் என் தந்தை நிற்கிறார் என்பதே எனக்கு மறந்துபோகும் அளவுக்கு ரொமான்ஸ் காட்சியில் சிறப்பாக நடித்துள்ளேன்.. படக்குழுவினர் கூட எனக்கும் கதாநாயகிக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பதாக பாராட்டினார்கள்.

சண்டைக்காட்சிகள் தான் என்னை பெண்டு நிமிர்த்திவிட்டது.. ஒருமுறை மேலிருந்து ஜம்ப் பண்ணும்போது என் கழுத்தை சுற்றி கயிறு வீசும் காட்சி படமாக்கப்பட்டது. முதல் தடவை பண்ணும்போது டைமிங் கொஞ்சம் மிஸ்ஸாகி கயிறு என் கழுத்தை இறுக்கி கிட்டத்தட்ட மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பினேன்.. ஆனால் அடுத்த காட்சியிலேயே அதில் வெற்றிகரமாக நடித்து முடித்து மாஸ்டரிடம் பாராட்டு பெற்றேன்..


அதேமாதிரி இந்தப்படத்தின் கேரக்டர் இதுதான் என இயக்குனர் சொல்லிவிட்டாலும், அதில் எந்தமாதிரி நடிக்கலாம் என அந்த மூடுக்கு ஏற்றவாறு என்னை தயார்படுத்திக்கொண்டேன்.. ஹாலிவுட்டில் இதை மெத்தேட் ஆக்டிங் என்பார்கள்.. குறிப்பாக படத்தின் பாடல்களை முன்கூட்டியே கேட்டு வாங்கி ஒவ்வொரு காட்சிக்கான மூடுக்கு என்னை தயார்படுத்திக்கொண்டேன்.. ஆரம்பத்தில் இயக்குனர் கூட என்னடா இவன் பாடல்களை எல்லாம் தேவையில்லாமல் முன்கூட்டியே கேட்டு வாங்கி, அதிகம் தலையிடுகிறானே என்று நினைத்தார். ஆனால் இதற்காகத்தான் என நான் விளக்கம் சொன்னதும் அவரும் புரிந்துகொண்டு ‘அட இது நல்லா இருக்கே’ என எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் தான் நடந்தது. இங்கே கிராமத்தில் ஒவ்வொருவரும் உறவுகளுக்கு கொடுக்கும் அன்பும் மரியாதையும் அவர்களின் ஒற்றுமையும் பார்த்தபோது டென்மார்க் தமிழரான எனக்கு புதிதாக, ஆச்சர்யமாக இருந்தது. படப்பிடிப்பின்போது ஒருமுறை காய்ச்சலால் நான் அவதிப்பட்டபோது கிராமத்தில் இருந்த ஒரு பாட்டி, எனக்கு பாட்டி வைத்தியம் பார்த்து குணப்படுத்தியது மறக்கமுடியாத அனுபவம்.

இன்னொரு விஷயம் நான் இலங்கை தமிழர் என்பதால் நான் பேசும் தமிழுக்கும் இங்கே உள்ள தமிழுக்கும் குறிப்பாக கிராமத்தில் உள்ள பேச்சு வழக்கு தமிழுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்தேன். அதனால் படப்பிடிப்பு நடந்த கிராமங்களில் மதிய, இரவு நேரங்களில் அப்படியே கிராமத்தை சுற்றி, அங்குள்ள மக்களுடன் பேசிப்பழகி ஓரளவு எனது பேச்சுமுறையை மாற்றிக்கொண்டேன்.. இது முதல் படம் என்பதால் எனக்கு வேறு ஒருவர் டப்பிங் பேசியுள்ளார்.. அடுத்தடுத்த படங்களில் நானே டப்பிங் பேசும் அளவுக்கு மாறிவிடுவேன்..

யாகன் படத்தின் கதை அப்பாவுக்கும் மகனுக்குமான உறவை பற்றியது. நிஜத்தில் சொல்லவேண்டுமென்றால் எனது தந்தை யோகராஜா சின்னத்தம்பி (இந்தப்படத்தின் தயாரிப்பாளர்) சினிமாவில் தீராத ஆர்வம் கொண்டவர்.. ஆனால் அவர் காலத்தில் சினிமாவுக்குள் அவரால் நுழைய முடியவில்லை.. அதேசமயம் எனக்குள் அந்த ஆசை இருப்பதை உணர்ந்து, என்னை நடிகனாக்க தமிழ்சினிமாவில் களம் அமைத்து கொடுத்துள்ளார்.

இந்தப்படத்தில் நடித்த அனுபவத்தை வைத்து சொல்லவேண்டும் என்றால் இந்தப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.. நம் தொப்புள் கொடி உறவுகள் என்னையும் தங்கள் பிள்ளையாகக் கருதி வெற்றிப் படிகளில் ஏற்றி வைப்பார்கள் , மனதார ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்” என்கிறார் சஜன் நம்பிக்கையாக.​




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *